ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் இன்னும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், காவல்துறையில் பதவிகளை வகித்து வருவதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொள்கையில்லை. இன்று ஒன்று. நாளை ஒன்று. நாளை மறுதினம் மற்றொன்று. அதிகாரத்திற்கும் பணத்திற்கும் பேராசைப்பட்டு காட்டிக் கொடுப்பவர்களால் இன்று இந்த நாடு வீழ்ச்சியடைந்துள்ளது.
சில சமயங்களில் தமது முட்டாள்தனத்தால் தான் மக்கள் துன்பப்படுகிறார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.மதம் என்பது ஞாயிறு ஆராதனைக்கு வருவது மாத்திரமா? மதம் என்பது வாழ்க்கையாகும். எமது நாட்டை தர்மதீபம் என அழைத்தனர். இங்கு தற்போது நடப்பதை பாருங்கள்.
எவ்வித கொள்கையும் இல்லாத, எவ்வித சட்டமும் இல்லாத சமூகம் ஒன்று எமது நாட்டில் உருவாகியுள்ளது. ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் யாரோ வெடிகுண்டு வைத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தேவாலயத்தில் இருந்த மூவரை கைது செய்தனர். ஒரு மாதத்திற்க மேல் தடுத்து வைத்திருந்தனர். குண்டை கொண்டு வந்தவர்கள் இவர்களல்ல. இன்று வரை அது பற்றி விசாரிக்கப்படவில்லை.
தேவாலய பணியாளர்கள் ஒரு மாதமாக தடுத்து வைக்கப்பட்டு, தாக்கி, பலவந்தமாக கையெழுத்து பெற்றனர். அந்த சம்பவத்தில் நீதி நிலைநிறுத்தப்படவில்லை. அந்த குண்டை அதிகாரம் பொருந்தியவர்களே வைத்தனர். அன்றைய அரசாங்கத்தின் அதிகாரம் பொருந்தியவர்களே வைத்தனர். அவர்கள்பற்றி எந்த விசாரணையும் இல்லை. இன்று வரை அந்த விசாரணை கிடப்பில் உள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இதேபோன்ற ஒரு நேரத்தில் தேவாலயங்கள், உணவகங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தினர்கள். 269 பேரின் உயிர்களை இல்லாதொழித்தனர். இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை.
இவர்களின் அதிகாரமே அதற்கு காரணம். நாம் உலக அரங்கில் வெட்கமடைய வேண்டும். நாட்டில் சட்டமில்லை. சட்டத்திற்கு இடமில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களின் சட்டமே உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தி குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்று எத்தனையோ கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், நாட்டின் சட்டம் எதுவும் செய்யவில்லை. இன்றும் அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். பொலிஸ் பதவிகளை வகிக்கிறார்கள். எமது நாட்டுக்காக கொள்கைகளை மதிப்பவர்களாக வாழ்வோம் என்றார்.




