பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் இன்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் நீதிபதி எச்.எம்.எம்.பசில் முன்னிலையில் இவரது வழக்கு இன்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டபோது நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவர் தனது சொந்த பெயர் பொறித்த முகப் புத்தகத்தில் அரசினால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் (கார்த்திகை-27) அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் 28.11.2020 ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இவர் கடந்த ஒருவருடமும் 4 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று காலை 9 மணிமுதல் 12 மணிக்குள் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் இணையதளம் மற்றும் சமூக வலைத் தளங்களில் செய்திகளை அறிக்கையிட்டு வந்தவர். இதேவேளை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணகளுக்குட்பட்டிருந்தார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 இல் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2018 இல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபையில் கிண்ணையடி வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்;டமைப்பின் சார்பில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன், ஹாலிப் றிபான் ஆகியோர்கள் இவ் வழக்கில் ஆஜராகியிருந்தனர். இவர்களுடன் சடடத்தரணிகளான சஞ்சயவில்சன் ஜெயசேகர, சுவஸ்திகா மற்றும் ஜெயசிங்கம் ஆகியோரும் பல்வேறு வகைகளில் சட்ட உதவிகளை வழங்கியிருந்தனர்.
ஊடகவியலாளர் மு.கோகிலதாசனின் விடுதலைக்காக , ஊடகவியலாளர் அமைப்புக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது




