26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

உலகின் வடக்கு எல்லையிலுள்ள குட்டித்தீவு கண்டறியப்பட்டது!

கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடக்கு எல்லையிலுள்ள தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் (Oodaaq) தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக, ஜூலை மாதம் அறிவியலாளர்கள் இந்தத் தீவைச் சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது.

ஆனால் அந்தத் தீவுக்குச் சென்ற பின்பு தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் ஜிபிஎஸ் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோதுதான், அவர்கள் ஊடாக் தீவிலிருந்து மேலும் 780 மீட்டர் வடக்கே இருப்பது தெரியவந்தது.

60 X 30 மீட்டர் அளவுள்ள இந்தத் தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும்.

“ஒரு புதிய தீவைக் கண்டுபிடிப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் மாதிரிகளைச் சேகரிக்க அங்கு சென்றோம்.” என்று துருவ ஆய்வாளரும் கிரீன்லாந்தில் உள்ள ஆர்டிக் நிலைய ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான மோர்டன் ராஷ் ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.

ஏறக்குறைய 30 மீட்டர் அளவிலும், சுமார் மூன்று மீட்டர் உயரத்திலும் இருக்கும் சிறிய தீவு, களிமண், பனிப்பாறை வண்டல் மற்றும் சரளைக் கற்கள் கடல் பனி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. க்ரீன்லாந்திய மொழியில் “வடக்கே தீவு” என்று பொருள்படும் “கெகர்டாக் அவன்னார்லெக்” என்று பெயரிட பரிந்துரைக்கப்படுவதாக குழு கூறியது.

“ஒரு சிறிய ஹெலிகாப்டரில் நாங்கள் ஆறு பேர் சென்றோம். ஊடாக் தீவு இருக்கும் நிலையை நாங்கள் சென்றடைந்த பொழுது எங்களால் அதைக் கண்டறிய இயலவில்லை. உலகின் இந்தப் பகுதியில் வரைபடங்கள் மிகவும் துல்லியமாக இருக்காது“ என்று மோர்டன் ராஷ் கூறுகிறார்.

இதன் காரணமாக அந்தத் தீவு எங்கே இருக்கிறது என்று நாங்களாகவே தேடத் தொடங்கினோம். உற்சாகம் மிகுந்த சில நிமிடங்களுக்கு பின்பு செடிகள் எதுவும் முளைக்காத ஒரு பகுதியைச் சென்றடைந்தோம்.

இந்தப் பயணத்திற்கு பின்பு இதுதொடர்பான நிபுணத்துவம் பெற்ற பல வல்லுநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல ஆலோசனைகளுக்கு பின்பு உலகின் வட கோடியில் இருக்கும் தீவை நாங்கள் ஒரு விபத்தாகக் கண்டுபிடித்ததை உணர்ந்தோம் என்று அவர் கூறுகிறார்.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்த தீவின் கண்டுபிடிப்பு அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று மோர்டென் ராஷ் கூறுகிறார்.

“ஆனால் தனிப்பட்ட விதத்தில் பார்க்கும் பொழுது உலகின் வட கோடியில் இருக்கும் இடத்துக்குச் சென்று, தங்கள் பூட்ஸ்களில் களிமண்ணை மிதித்த ஆறு மனிதர்களில் நீங்களும் ஒருவர் என்பது ஒரு வேடிக்கையான விஷயம்,” என்று அவர் கூறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

Leave a Comment