அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற இலங்கை மீன்பிடி படகுகள் மூன்றை, இந்திய கடலோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கேரள கடற்பிராந்தியத்தில் மினிகோய் கடற்பகுதியில் படகுகள் கைப்பற்றப்பட்டன.
ஆகாஷ் துவா, சது ரணி 03, சது ரணி 08, என்ற பெயர்களையுடைய படகுகளையும், அவற்றில் பயணித்த 19 பேரையும் இந்திய கடலோர காவற்படை பொறுப்பேற்றுள்ளது.
மார்ச் 5 ம் திகதி மினிகோயிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகத்திற்கிடமாக பயணித்த 3 படகுகளையும், கடலோரக் காவற்படையின் ‘வராஹா’ கப்பல் தடுத்து நிறுத்தியது.
கடலோர காவல்படை வீரர்கள் படகுகளில் ஏறி சோதனையிட்டனர். முதற்கட்ட விசாரணையில், அங்கீகரிக்கப்படாத தகவல்தொடர்பு உபகரணங்களைப் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
விரிவான விசாரணைக்காக படகுகள் ஞாயிற்றுக்கிழமை விஜின்ஜாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களில் ஒன்றின் கப்டன், இலட்சத்தீவுக்கு மேற்கே 400 கடல்மைல் தொலைவில் உள்ள பாகிஸ்தான் படகில் இருந்து 200 கிலோ ஹெரோயின் மற்றும் 60 கிலோ ஹஷிஷ் போதைப்பொருள் பெற்றதாக ஒப்புக்கொண்டார்.
கடலோர காவல்படை கப்பலை கண்டதும், இந்த பொதைப்பொருட்கள் ஐந்து பொட்டலங்களில் அடைக்கப்பட்டு கடலில் வீசப்பட்டன.
கடலோர காவல்படை விமானமே முதலில் அவர்களை அடையாளம் கண்டது.
கடலோர காவல்படை விமானம் மற்றும் கப்பலை இலங்கை படகுகள் கவனித்ததும், ஒரு படகின் கப்டன் துரையா செய்மதி தொலைபேசியை பயன்படுத்தி பிரதான வழிநடத்துபவரை தொடர்பு கொண்டார். அவர்கள் தப்பி ஓட அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால், அது சாத்தியமில்லாததால், அவர்கள் துரையா செய்மதி தொலைபேசியையும் அனைத்து போதைப்பொருட்களையும் தண்ணீருக்குள் வீசியதாக கப்டன் தெரிவித்தார்.