வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

Date:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர் அரசியல் தலைமைகள் மற்றும் பொதுமக்கள், தமிழர் தேச உரிமை, சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அறிக்கையில், 1976 ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு சாதாரண அரசியல் ஆவணம் அல்ல; அது தமிழர் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளையும், இழந்த தேசத்தை மீட்டெடுக்கும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய வரலாற்றுப் பிரகடனம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அந்தத் தீர்மானத்திற்கு ஜனநாயக ஆணை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, 1956 “சிங்களம் மட்டும்” சட்டம், தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள், கல்வி தரப்படுத்தல், அரச ஆதரவு குடியேற்றங்கள் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளின் பின்னணியில்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் உருவானது என்றும், அது கோபத்தின் தீர்மானம் அல்ல; விடுதலையும் சுயநிர்ணயத்தையும் வலியுறுத்திய அரசியல் அறிவிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்றும் தமிழர் தேசியக் கேள்வியின் அடிப்படை அம்சங்கள் தீர்க்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அறிக்கை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் இன்னும் பொருத்தமுடையதே என்ற நிலைப்பாட்டை முன்வைக்கிறது. “சுயநிர்ணய உரிமை காலாவதியாகாது; ஒரு மக்களின் தாயக உரிமை அழியாது” என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள், சமூக அமைப்புகள், இளைஞர்கள், பெண்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மையமாகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமைகள் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது என்றும், ஒரே மக்கள் ஆணையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில் சிங்கள மக்களையும் நேரடியாகச் சந்தித்து, தமிழர்கள் வேறு யாருடைய நிலத்தையும் கோரவில்லை; காலனித்துவ ஆட்சியால் பறிக்கப்பட்ட தமது தேசத்தையும் இறைமையையும் மீண்டும் கோருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா, தமிழக மக்கள் மற்றும் உலக நாடுகளிடமும் தமிழர் தேசியக் கேள்வியை புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, வட்டுக்கோட்டை–50 என்பது கடந்தகால நினைவேந்தல் மட்டுமல்ல; தமிழர் அரசியல் சிந்தனையை புதுப்பிக்கும் புதிய தொடக்கம் என்றும், சர்வதேச கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு மூலம் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. “தமிழராய் எழுவோம்; தாயகம் காண்போம்” என்ற முழக்கத்துடன் அறிக்கை நிறைவடைந்தது.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அண்மித்த பகுதிகளில்...

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்