இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும் என யாழ் மாநகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு, ஈ.பி.டி.பி கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று (19) இடம்பெற்றது. விளம்பர பலகை விவகாரம் நேற்று நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி நேற்று ஏனைய விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அந்த விடயங்களை விவாதிக்க இன்று மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு, இன்று மாநகரசபை அமர்வு இடம்பெற்றது.
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர் அணியான மணிவண்ணன் தரப்பை சேர்ந்த வி.பார்த்தீபனால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் மூலம், அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தின் மூலம் நீதி வழங்கப்பட வேண்டும். இந்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ராகிணி முன்மொழிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வித்தியானந்தன் வழிமொழிந்தார்.
தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.