யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரு மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 21 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 19ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, திருநெல்வேலி பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலின்போது, இரு தரப்பினரும் வீதியில் வைத்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதன்போது, மாணவர் ஒருவர் பிளேடு மூலம் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களைக் காயப்படுத்தியுள்ளார். பிளேடு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் உட்பட மோதலில் காயமடைந்த ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், பிளேடு மூலம் மாணவர்களைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் மாணவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், குழுக்களாக வீதியில் மோதலில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மேலும் 20 மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த மோதலில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




