நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பிரான்ஸ் புலனாய்வாளர் யூசர் கலீல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஃபோரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ் (Forensic Risk Alliance – FRA) நிறுவனத்தின் பங்குதாரரும், பாரிஸ் அலுவலகத்தின் தலைவருமான யூசர் கலீல், இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களால் பெயரிடப்பட்டுள்ள முக்கிய சாட்சிகளில் ஒருவராவார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட ஏர்பஸ் நிறுவனத்தின் சர்வதேச விசாரணையில் கலீல் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்த விசாரணை, பல்வேறு நாடுகளில் விமான விற்பனை ஒப்பந்தங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இலஞ்சக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தது.
வழக்கில் முன்னிலையாகும் மற்றுமொரு முக்கிய சாட்சி!
குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய சாட்சியான ஏர்பஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்ல் ஹென்னசியும் இந்த வழக்கில் சாட்சியமளிக்க இலங்கை வருவார் என சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவின் சட்ட அமலாக்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட இந்தப் பன்னாட்டு விசாரணையில், விமான விற்பனை ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களின் சர்வதேச வலையமைப்பு அம்பலப்படுத்தப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விமான ஒப்பந்தம்!
இந்த விசாரணையில் இலங்கையுடன் தொடர்புடைய முக்கிய அம்சமாக, சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் அமைந்துள்ளது.
அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய கபில சந்திரசேன, தற்போது உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விமானக் கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாக 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பேரத்தில் ஈடுபட்டதாக புலனாய்வாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், சர்வதேச விசாரணையில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் புலனாய்வாளர் யூசர் கலீலின் சாட்சியம், இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறவுள்ளது




