சந்தையில் நிலவும் மஞ்சள் நிற லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைச் சாதகமாகப் பயன்படுத்தி, காலியான லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாகக் காட்டி மோசடி செய்த சம்பவமொன்று கொட்டதெனியாவ பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர் ஒருவரும், தந்தை மற்றும் மகன் என மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், திவுலபிட்டிய, குடகம்மன பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் எரிவாயு விற்பனை முகவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சந்தேகநபர் தனது எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்த காலியான லாஃப்ஸ் சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ சிலிண்டர்களைப் போன்று மாற்றியுள்ளார்.
பின்னர், தந்தை மற்றும் மகனின் உதவியுடன் அவர்களுக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியைப் பயன்படுத்தி, அந்த போலி நீல நிற சிலிண்டர்களை அப்பகுதியிலுள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கு விற்பனையாளர்களிடம் போலி சிலிண்டர்களைக் கொடுத்து, அவற்றுக்குப் பதிலாக உண்மையான லிட்ரோ எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை உயர்வு மற்றும் சந்தையில் நிலவிய தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக இந்த மோசடியைச் சந்தேகநபர் முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட எரிவாயு நிரப்பப்பட்ட ஒரு லிட்ரோ சிலிண்டரை 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீல நிறம் பூசப்பட்ட 40 காலி எரிவாயு சிலிண்டர்களும், போலி சிலிண்டர்களுக்குப் பதிலாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நீல நிற லிட்ரோ எரிவாயு நிரப்பப்பட்ட 3 சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிலிண்டர்களில் சில விற்பனை செய்யப்பட்டிருந்த இடங்களிலும், ஏனையவை பிரதான சந்தேகநபரின் வீட்டிலும் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




