எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாக்கக்கூடிய புதிய வகை தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பூசியின் முக்கிய அங்கமான “ஆன்டிஜென்” பகுதி முழுமையாக செயற்கை நுண்ணறிவின் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதர்களில் சோதிக்கப்படுவது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக வைரஸ்கள் தொடர்ந்து தங்களது மரபணு அமைப்பை மாற்றிக்கொள்வதால், கொவிட் மற்றும் குளிர்கால காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த சவாலுக்கு தீர்வு காணும் வகையில், உலகின் பல்வேறு கொரோனா வைரஸ்களின் மரபணு தகவல்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், வைரஸ்கள் எவ்வளவு பிறழ்வடைந்தாலும் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய “சூப்பர் ஆன்டிஜென்” ஒன்றை AI தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைத்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜொனாதன் ஹீனி கூறுகையில், “நாம் எப்போதும் வைரஸ்களின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தொழில்நுட்பம் வைரஸ்களின் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்கூட்டியே எதிர்கொள்ளும் திறனை வழங்குகிறது” என்றார்.
இந்த தடுப்பூசியின் பாதுகாப்பை மதிப்பிடும் நோக்கில் 39 ஆரோக்கியமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. அதன் முடிவுகள் Journal of Infection இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, சுமார் 200 பேரை உள்ளடக்கிய விரிவான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு செயல்திறன் கொண்டது என்பதை ஆய்வு செய்யவுள்ளனர்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆண்டுதோறும் மாற்ற வேண்டிய அவசியமில்லாத உலகளாவிய காய்ச்சல் தடுப்பூசி, பறவைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் எபோலா வைரஸுக்கான தடுப்பூசிகளையும் உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஆண்டி பொல்லார்ட், “செயற்கை நுண்ணறிவு தடுப்பூசி ஆராய்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது தடுப்பூசி உருவாக்கும் வேகத்தை அதிகரித்து எதிர்காலத்தில் கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.


