தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.
இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.



