வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ கடந்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளிலும், தலைநகர் கராகஸின் சில பகுதிகளிலும் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி, வெளிநாடுகளிலிருந்து 1,600-க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் வெனிசுலா வந்துள்ளனர். மேலும் பல நாடுகளின் மீட்புக் குழுக்களும் விரைவில் இணையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பிந்தைய அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரம்
மிகவும் பாதிக்கப்பட்ட லா குவைரா (La Guaira) மாநிலத்தின் கரபல்லேடா (Caraballeda) பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்புக் குழுக்களை கொண்டு வந்து களமிறக்கி வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வெனிசுலாவின் சான் கிறிஸ்டோபாலில் இருந்து வந்த 33 வயதான தொழில்துறை பொறியாளர் அலெஹாண்ட்ரோ செரானோ, இடிந்து விழுந்த “Bahía Mar” கட்டிடத்தில் வசித்த தனது 24 வயது சகோதரி ஆனா செரானோவை தேடி வருகிறார்.
முதலில் அவர் கராகஸில் உள்ள Perez Carreno மருத்துவமனையில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அவரது விவரங்களை அர்ஜென்டினா மற்றும் எல் சால்வடார் மீட்புக் குழுக்களிடம் வழங்கியுள்ளார்.
“இடிபாடுகளில் அவளை கண்டுபிடிக்க வேண்டாம் என்பதே என் பிரார்த்தனை. அவள் இன்னும் உயிருடன் இருக்க வேண்டும். ஆனால் அவளை கண்டுபிடிக்க வேண்டும்,” என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
மக்கள் அவதி
லாஸ் கொராலெஸ் (Los Corales) பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெய்ஸி ரிவாஸ், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து ஏற்படும் பிந்தைய அதிர்வுகளால் அப்பகுதி மக்கள் பெரும்பாலும் வீதியிலேயே தங்கியிருப்பதாகவும் கூறினார்.
“நிலநடுக்கம் ஏற்பட்ட இரவிலிருந்து வீடுகளுக்குள் செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். உயிரிழந்தவர்களையும், உறவுகளை இழந்த குடும்பங்களையும் நினைத்தாலே மனம் பதறுகிறது,” என்றார்.
அதே பகுதியில் வசிக்கும் யென்றி சாண்டானா, தனது சகோதரியின் வீடு முழுமையாக சேதமடைந்தாலும் அவர் உயிர் தப்பியதாக கூறினார்.
“மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த அனைத்தையும் ஒரு கணத்தில் இழப்பதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது,” என்றார்.
போக்குவரத்து கட்டுப்பாடு
மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், லா குவைரா செல்லும் முக்கிய சாலைகளில் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அதிகாரப்பூர்வ மீட்புக் குழுக்களுடன் தொடர்பில்லாத பொதுமக்கள் அனுமதி ஆவணங்களின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் படிப்படியாக மீட்பு
பல ஆண்டுகளாக முதலீட்டுக் குறைவு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் மின்சார அமைப்பு தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் இன்னும் நீண்ட நேர மின்வெட்டுகள் நீடிக்கின்றன.
ஆயிரக்கணக்கானோர் மாயம்
அரசு நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் உருவாக்கிய இணையதளத்தில் 55,000-க்கும் அதிகமானோர் இன்னும் தொடர்பின்றி இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS), இந்த இரட்டை நிலநடுக்கங்களால் இறுதியில் 10,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என மதிப்பிட்டுள்ளது. அது நிகழ்ந்தால், கடந்த நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பதிவாகும்.
அரசியல் தாக்கம்
இந்த பேரழிவு, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸுக்கு அரசியல் அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த அவர், ஜனவரியில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவுக்குப் பிறகு இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
சர்வதேச ஆதரவு
ரோம் நகரில் பேசிய போப் லியோ, உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தார். உலக நாடுகள் வெனிசுலாவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா ஏற்கனவே 150 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை உறுதியளித்துள்ளது. அதற்கு மேலாக, மேலும் பல நூறு மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய நிதி உதவித் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வெளிநாட்டில் இருக்கும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் உதவியுடன் நாடு திரும்ப முயற்சிப்பது குறித்து வாஷிங்டனில் உள்ள உயரதிகாரிகள் தற்போது சரியான நேரமல்ல என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




