வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரு பெண்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை புகையிரத நிலைய வீதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பெண்ணையும் கேரளா கஞ்சாவையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.