யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று வருமான வரித்துறை என தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் சுன்னாகம் பகுதியில் நேற்ற முன்தினம் கைதான பிரதான சந்தேக நபரை நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கண்டியில் நேற்று கைதான மூவரையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள்.
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிதி நிறுவனமொன்றின் நுவரெலியா கிளையொன்றின் முகாமையாளர், உதவி முகாமையாளர் ஆகியோரும் இந்த கொள்ளையுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களும் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வாகனத்தை பயன்படுத்தியே கொள்ளையில் ஈடுபட்டனர். வாகனமும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.