ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ளசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன் (சிஎஸ்கே) பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த வரிசையில் 3வதுஅணியாக தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் இணைந்துள்ளது. நேற்று முன்தினம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 15 புள்ளிகளுடன் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணியானது 7 வெற்றி, 5 தோல்வி, ஓர் ஆட்டம் முடிவு இல்லாதது என புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிளே ஓஃப் சுற்றில் மீதம் உள்ள ஓர் இடத்தை பிடிப்பதற்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே, ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணியானது 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 0.387 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியானது கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஓஃப் சுற்றில் நுழைய முடியும். அதிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
உதாரணமாக ஆர்சிபி முதலில் துடுப்பெடுத்தாடி 200 ரன்கள் குவித்தால் சிஎஸ்கே அணியை குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் 201 ரன்கள் இலக்கை ஆர்சிபி துரத்தினால் 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற வேண்டும். இதில் 200 ரன்களில் இருக்கும் போது ஆர்சிபி அணி சிக்ஸர் விளாசி வெற்றி பெற்றால் 8 பந்துகள் மீதம் இருந்தால் போதுமானது.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி முதல்8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 6 தோல்வியை சந்தித்தநிலையில் அதன் பின்னர் மீண்டு வந்து கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் அபாரமான வெற்றிகளைகுவித்தது. இந்த 5 ஆட்டங்களிலும் கணிசமான ரன் ரேட்டில் வெற்றி பெற்றதால் தனது கடைசிலீக் ஆட்டம் வரை பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரரான விராட் கோலி 13 ஆட்டங்களில் ஒரு சதம், 5 அரை சதம் என 155.16 ஸ்டிரைக் ரேட்டுடன் 661 ரன்களை வேட்டையாடி இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
சிஎஸ்கே அணியானது இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே எளிதாக பிளே ஓஃப் சுற்றில் கால்பதித்து விடும். அதேவேளையில் தோல்வி அடைந்தாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொண்டாலும் பிளே ஓஃப் சுற்றில் நுழைந்துவிடலாம்.
துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒருசதம், 4 அரைசதங்கள் உட்பட 583 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர், பேட்டிங் செய்வது பலமாக பார்க்கப்படுகிறது.
பெங்களூரு ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கே சாதகமானது என்பதால் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சும் சோதனைக்கு உட்படுத்தப்படக்கூடும்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் இன்று பெங்களூருவில் மோதும் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரின் சில பகுதிகளில் இன்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போட்டி தொடங்கும் நேரமான இரவு 7.30 மணி அளவில் வெப்பநிலை 23 டிகிரியாக இருக்கும் எனவும் 100 சதவீத மேகமூட்டம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவோ அல்லது போட்டியின் போதோ மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும் சின்னசாமி மைதானம் சிறந்த வடிகால் அமைப்பை கொண்டுள்ளது. மேலும் மழை நின்ற 30 நிமிடங்களுக்குள் மைதானத்தில் உள்ள ஈரத்தன்மையை உலர்த்தும் அதிநவீன அமைப்பும் உள்ளது.
ஓவர் குறைந்தால்…?
ஆர்சிபி – சிஎஸ்கே அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. ஒருவேளை மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் ஆர்சிபி அணிக்கு சிக்கல்தான். 5 ஓவர்களை கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டால் சிஎஸ்கே அணி முதலில் துடுப்பெடுத்தாடி 75 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இந்த இலக்கை ஆர்சிபி அணி 3.1 ஓவர்களில் அடைய வேண்டும். அதேவேளையில் ஆர்சிபி முதலில் துடுப்பெடுத்தாடி 75 ரன்களை சேர்த்தால் சிஎஸ்கே அணியை 57 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
இன்றைய ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இது நிகழ்ந்தால் ஆர்சிபி அணி 13 புள்ளிகளுடன் பிளே ஓஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். மாறாக சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே ஓஃப் சுற்றில் கால்பதிக்கும்.




