2023 இல் இதுவரை பதிவு செய்யப்பட்ட டெங்கு இறப்புகளின் எண்ணிக்கை 50 ஐ எட்டியுள்ளது. தொற்று எண்ணிக்கை 84,000 ஐ எட்டியுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் படி, டிசம்பர் 22 வரை, 2023 இல் மொத்தம் 84,038 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 17,803 ஆக இருந்தது.
மேல் மாகாணத்தில் 38,673 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண வாரியாக மேல் மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் 7,550 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன, நாளாந்தம் சராசரியாக 250 நோயாளர்கள் பதிவாகும் ஒரு கட்டத்திற்கு நாடு மீண்டும் நுழைந்துள்ளதாக கவலை தெரிவித்தார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை டெங்கு நோயாளர்களின் அதிகரிப்புக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக டொக்டர் ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.
எனவே, டெங்கு காய்ச்சலைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுதல் மற்றும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றுவதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.