25.9 C
Jaffna
January 3, 2025
Pagetamil
குற்றம் முக்கியச் செய்திகள்

4 முறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட பிள்ளைகள்… உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டே தப்பியோடிய மனைவி; மிருசுவிலில் தந்தையை கொன்ற பிள்ளைகள் விவகாரம்: திடுக்கிட வைக்கும் பின்னணி!

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் தந்தையை இரண்டு மகன்கள் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தையின் மனிதாபிமானமற்ற கொடுமைகளை பொறுக்க முடியாமல், பிள்ளைகள் 4 முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததும், மனைவி மரணத்தின் விளம்பு வரை சென்று, பின்னர் இலங்கையை விட்டே வெளியேறியதும் தெரிய வந்துள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் கடந்த மார்ச் 31ஆம் திகதி காலையில், குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கராட்டி சிவா  என அழைக்கப்படும் சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். ஒரு மகளை அழைத்துக் கொண்டு அவர் இந்தியா சென்று தனிதது வாழ்ந்து வருகிறார். உயர் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ஆண் பிள்ளைகள் இருவரும், வீட்டில் இருந்தனர்.

உறவினர்கள் அந்த பிள்ளைகளை கவனித்து வந்தனர்.

அந்த பகுதியில் கொல்லப்பட்டவரும், அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். உறவினரின் தோட்ட குடிலில் இரவில் தங்கியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவத்தன்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என பொலிசார் வினவியபோது, நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தம்மை அழைத்துச் சென்றதாகவும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு அண்மையாக வந்ததும், தம்மை வாளால் வெட்டியதாகவும், தாம் தப்பியோடி விட்டதாகவும், தந்தையை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காலையில் பொலிசார் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். தம்பியாரை பொலிசார் விசாரித்ததில் கொலை மர்மம் துலங்கியது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் தானும், சகோதரனும் தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அவர்களின் தந்தை கராத்தேயில் கருப்புப் பட்டி பெற்றவர். அவரது திருமணமும் சர்ச்சைக்குரியதாகவே அமைந்திருந்தது. கரம்பகத்தை சேர்ந்த பெண்ணொருவரில் காதல் கொண்டு,  திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்தில் அவர்களிற்கு 3 பிள்ளைகள்.

அவருக்கு தனது மனைவியில் தவறான சந்தேகம் ஏற்பட்டு கொடூரமாக தாக்கி வந்துள்ளார். இரண்டு வருடங்களின் முன்னர் ஒருமுறை அவரை கொடூரமாக அடித்து, கத்தியால் வெட்டி தாக்கியுள்ளார்.

பின்னர் அயலவர்களால் மீட்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் கோமா நிலையில் இருந்த மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்திருந்தார்.

அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர், இலங்கையில் இருக்க அச்சத்தில் கடைசி மகளை அழைத்துக் கொண்டு இந்தியா சென்று விட்டார்.

அவரது உடன்பிறப்புக்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். தாயாரும் பிள்ளைகளுடன் தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், உயர்தரத்தை நெருங்கிய பிள்ளைகளை இந்தியா அழைத்து சென்றால், கல்வி பாதிக்கப்படும் என்பதால், அவர்களை வீட்டிலேயே தங்க வைத்துவிட்டு தாயார் இந்தியா சென்றிருந்தார். அவர்களின் நெருங்கிய உறவினர்களான அயல்வீட்டுகாரர்கள் உணவளித்து, அவர்களை கவனித்து வந்தனர். பிள்ளைகள் இருவரும் நன்றாக படித்து வந்தனர்.

தந்தையார் வீட்டில் தங்குவதில்லை. வீட்டுக்கு வரும் போது பிள்ளைகளை கடுமையாக அடித்துள்ளார். குறிப்பாக மூத்த மகனை கண்டாலே அடிப்பார். அவரது கொடுமை பொறுக்க முடியாமல், பிள்ளைகள் 4 முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

வழக்கமாக பெற்றோர் கண்டிப்பதை போல தந்தை செயற்படுவதற்கு பிள்ளைகள் முறைப்பாடு செய்கிறார்கள் என்று கருதியோ என்னவோ, பொலிசார் அந்த முறைப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை.

ஒருமுறை மாத்திரம் பொலிசார் தலையிட்டு, பிள்ளைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடொன்றை செய்துள்ளனர்.

ஒரு முறை பாடசாலைக்குள் புகுந்து மூத்த மகனை தாக்கினார். மற்றொருமுறை மீசாலை சந்தியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றவரை, மீசாலை சந்தியில் வைத்து, சக மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது, அடித்தார்.

இரண்டு பிள்ளைகளின் அம்மம்மா அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்து, சிறிது நாட்கள் மிருசுவிலில் தங்கியிருந்தார். அப்பொழுதுதான், தமது வீட்டிற்கு பிள்ளைகள் இருவரும் சென்றனர்.

இந்த நிலையிலேயே தந்தையின் கொடுமையை பொறுக்க முடியாமல், இரண்டு பிள்ளைகளும் அவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.

30ஆம் திகதி இரவு 8 மணியளவில் – அவர்களிற்கு உணவு வழங்கும் உறவினர் வீட்டிலிருந்து 20 வயதான இளைஞன் ஒருவர் உணவு கொண்டு வந்துள்ளார்.

அவரிடம், தமது தந்தையார் தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என பார்த்து வருமாறு கேட்டுள்ளனர். தமது தந்தையார் கொடுமை செய்வதாகவும், அவரது தோட்டத்தின் தென்னம்பிள்ளைகளை வெட்டப் போவதாகவே அவரிடம், சகோதரர்கள் கூறியுள்ளனர்.

அவர், தோட்டத்திற்கு சென்று பார்த்து வந்தார். தந்தையார் தோட்டத்தில் நிற்பதை பிள்ளைகளிடம் கூறியுள்ளார். பிள்ளைகளிற்கு தமது தந்தையின் தோட்டம் இருக்குமிடமே அதுவரை தெரியாது. அங்கு செல்வதேயில்லை. தோட்டத்திற்கு தம்மை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளனர். அந்த இளைஞனும் அழைத்துச் சென்றார்.

வீட்டிலிருந்த பெரிய கத்தியொன்றை 19 வயதான மகன் எடுத்தார். சிறிய சமையலறை கத்தியை 18 வயதான மகன் எடுத்தார்.

வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள குடிலுக்கு இருவரையும்  அழைத்துச் சென்ற இளைஞன், உடனடியாக அங்கிருந்து வீடு திரும்பி விட்டார்.

சகோதரர்கள் இருவரும், தோட்டத்திற்கு அண்மையிலிருந்த பற்றைக்குள் பதுங்கியிருந்துள்ளனர். கிட்டத்தட்ட இரவு 8.30 மணியிலிருந்து அதிகாலை 1.30 மணிவரை பற்றைக்குள் பதுங்கியிருந்தனர்.

இவு 1.30 மணிக்கு இரகசியமாக குடிலுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலும், தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதனால் அச்சமடைந்த தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும் போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. எனினும், சகோதரர்கள் இருவரும் கண்மூடித்தனமாக தந்தையை வெட்டினர். அவரது கழுத்து, முகம், நெஞ்சு, கையில் சரமாரியமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

பின்னர் அங்கிருந்து திரும்பி, உடைகளை தீயிட்டு எரித்தனர். வீடு திரும்பி குளித்து விட்டு, மூத்த மகன் வைத்தியசாலைக்கு சென்றார்.

அவர்களை இரவு குடிலுக்கு அழைத்துச் சென்ற நண்பனே, காயமடைந்த மூத்த மகனுடன் வைத்தியசாலையில் தங்கியிருந்துள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் கொலை மர்மம் துலங்கியதையடுத்து, 3 பேரும் கைதாகினர்.

கைதான மூத்த மகன், அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி முடிவுக்கு காத்திருக்கிறார். அவர் க.பொ.த சாதாரணதரத்தில் 8 ஏ, பி பெறுபேற்றை பெற்றவர்.

கைதான தம்பி அடுத்த முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகிறார்.

கைதான நண்பர், நடந்து முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இரண்டாவது முறையாக தோற்றியுள்ளார்.

மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர்கள்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக கைதான 3 மாணவர்களும், போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என சில சமூக ஊடக விசமிகள் போலித் தகவல் பரப்ப முயன்றனர். எனினும், கைதான 3 பேருமே போதைப்பொருள் பழக்கமற்றவர்கள் என்பது மருத்துவ அறிக்கைகள் மூலம் பொலிசாரால் உறுதிப்படுத்தப்பட்டது.

மூவரும், சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு ஏப்ரல் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment