வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை, பெற்றோரின் மூட நம்பிக்கையால் உயிரிழந்துள்ளது.
8 மாத குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல், நூல் கட்ட கொண்டு சென்றதால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.
யாழ்ப்பாணம், நாவாந்துறையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
நாவாந்துறையை சேர்ந்த குடும்பமொன்று அண்மையில் அச்சுவேலியில் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பி வரும் போது, அவர்களின் 8 மாத குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்குள்ள ஒருவரிடம் “தேறு கயிறு“ கட்ட கொண்டு சென்றுள்ளனர். குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
சம்பவத்தை அறிந்த பிரதேச மருத்துவமாது, பெற்றோரை எச்சரித்து நேற்று வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். எனினும், வைத்தியசாலையில் குழந்தை உயிரிழந்தது.




