வடக்கு ஆளுனர் நிறைவேற்றியுள்ள சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு வடக்கு மாகாண ஆளுனர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பில் அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில்-
வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் எனக் கூறப்படும் பின்வரும் அறிவித்தல்களை 2303/29 இலக்கம் கொண்ட 27.10.2022 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தகமானியில் பிரசுரித்துள்ளார் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
1) 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வாழ்வாதார முகாமைத்துவ சேவைகள் நியதிச் சட்டம்
2) 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சுற்றுலாப் பயணிகள் நியதிச் சட்டம்
இந்த ஆவணங்களில் தாம் அரசியலமைப்பின் உறுப்புரிமை 254 C இன் கீழான ஏற்பாடுகளின் படியும் உறுப்புரிமை 254 T இன் கீழ் 24.03.1990 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் கீழான ஏற்பாடுகளின் படியும் செயற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
இந்த ஆவணங்களின் அமைப்பு முறை மற்றும் சொற்பிரயோகங்களின் மீது விமர்சிப்பதை நான் தவிர்க்க விரும்புகின்றேன்.
எனினும், ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பாக குறிபிடும் அரசியலமைப்பின் 254 C உறுப்புரிமையின் கீழ் சட்டவாக்க அதிகாரத்தை தாம் பிரயோகிப்பதாக கூறுவது மிகவும் குழப்பகரமாகக் காணப்படுகின்றது.
உண்மையில் இந்த உறுப்புரிமை மாகாண சபைகளின் நியதிச் சட்டவாக்க அதிகாரம் பற்றியும் குறிப்பிடுகின்றது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நியதிச் சட்ட உருவாக்கம் ஆகியவற்றுக்’கிடையேயான வேறுபாடு மிகவும் வெளிப்படையானது. எனவே இந்த உறுப்புரிமையின் கீழ் இவர் நியதிச் சட்டங்களை இயற்ற முடியாது.
நிலைமாறு கால ஒழுங்குகள் பற்றிய அரசியலமைப்பின் உறுப்புரிமை 254 T இன் கீழான ஜனாதிபதியின் பிரகடனத்தை இவர் கவசமாக முன் வைக்கின்றார். இவையும் நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழஙகவில்லை.இதுபோன்ற சட்டவாக்கம் அல்லது சட்டம் இயற்றல் அதிகாரம் உலகில் வேறு எங்கிலும் தனிநபர் ஒருவருக்கு வழஙக்கப்பட்டோ பிரயோகிக்கப்படவோ இல்லை.
மற்றவர்களுக்குத் தெரியாமல் இரகசியமான முறையில் ஆளுநர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஜனநாயகத்தினதும் ஜனநாயக ஆட்சி முறையினதும் ஜனநாயகக் கட்டமைப்புகளினதும் மக்களின் ஜனநாயக உரிமைகளினதும் அடிப்படை அத்திவாரத்தையே தகர்ப்பனவாகும்.
ஆளுநரின் தற்றுணிவு அதிகாரம் அரசியலமைப்பின் உறுப்புரிமை 254 F (2) படி ஜனாதிபதியின் பணிப்பின் கீழானதாக வேண்டும் என்பதும் ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் 15 (2)ஆம் பிரிவின்படி ஜனாதிபதியின் பெயரில் என கூறப்பட வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியது மிகப் பொருத்தமானதாகும்.
எனவே வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயத்தில் திட்டமிட்டே இந்த நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளார் என்பது தெளிவு என்பதால் இதற்கெதிராக பொருத்தமான, காத்திரமான நடவடிக்கை வேண்டப்படுகின்றது- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.