சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளில், 130 நாடுகளில் இலங்கை குறைந்த சம்பளம் வழங்கப்படும் நாடுகளில் 120ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை முன்னிறுத்தி அரச மற்றும் மாகாண அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி, திங்கட்கிழமை போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளது.
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தம்மிக்க முனசிங்க, ஆகஸ்ட் 31ஆம் திகதி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அதிகாரிகளின் பிரதான கோரிக்கையாக, அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எரிபொருள் விலைகள் ஆறு தடவைகள் அதிகரித்துள்ளதால் அரச அதிகாரிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது. இந்த உறுதி ஜூன் மாதம் வழங்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் நிலையிலும் அது தொடர்பான எந்தவொரு பத்திரமும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை,” என தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சரவைப் பத்திரத்தை மறைக்காமல் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்தக் கூற்றுக்கு மாறாக, பெயரளவிலான சிறிய அதிகரிப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பள நிலை தொடர்பான உண்மையான நிலைமையை IMF மற்றும் ILO அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரயில்வே ஊழியர்கள் திணைக்களம் தொடர்பான பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கும் தம்மிக்க முனசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் 50 சதவீதம் குறைந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு தடை விதிப்பது, தொழிற்சங்க உறுப்பினர்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமையை கட்டுப்படுத்துவதாகும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்




