உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் இருந்த முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் முன்னெடுத்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் அங்குள்ள இதய சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சல்லேவை குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த பெப்ரவரி 25 அன்று கைது செய்தது. பின்னர், 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தன்னைச் சார்ந்த விசாரணைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஈடுபடக் கூடாது என்றும், தன்னை வேறு தடுப்புக் காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்.
உண்ணாவிரதத்தின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், கடந்த ஜூன் 27 அன்று இதய சம்பந்தப்பட்ட அவசர மருத்துவ நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் சுரேஷ் சல்லே தனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.




