திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் ஆஜராகி, சட்டவிரோத கட்டுமானம் தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அதன்படி, தலா 25,000 ரூபாய் அபராதம் செலுத்திய அவர்கள், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட 10 பேரும், புதிதாக ஆஜரான 3 பேரும் உட்பட மொத்தம் 13 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர். மேலும், வழக்குடன் தொடர்புடைய இரு நபர்கள் அடுத்த கட்ட விசாரணையில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத கட்டுமான குற்றச்சாட்டை சிலர் ஒப்புக்கொண்டிருந்தாலும், புத்தர் சிலை நிறுவல், பொலிஸார்மீது தாக்குதல் உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்தும் நிலுவையில் இருப்பதால், அதன் விசாரணை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், புத்தர் சிலைக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தற்காலிக கூடாரத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு, கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியிருந்தது. அதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும், 10,000 ரூபாய் காசுப் பிணையும் விதிக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரைப் பகுதியில், கடற்கரையிலிருந்து சுமார் 11 மீற்றருக்குள் அமைந்த பகுதியில் கடந்த 2025 நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு புத்தர் சிலை நிறுவி சமூக அமைதியை பாதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருகோணமலை துறைமுக பொலிஸார் கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் 2025 நவம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
முதன்முறையாக 2025 நவம்பர் 26 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிரிகள் தரப்பில் எவரும் முன்னிலையாகவில்லை. பின்னர் 2026 ஜனவரி 14 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையில், கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், சுவிதவன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய நான்கு பௌத்த பிக்குகள் உட்பட ஒன்பது பேரை ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து ஜனவரி 19 ஆம் திகதி மேலும் ஒருவர் சரணடைந்த நிலையில், பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 10 பேரின் விளக்கமறியல் ஜனவரி 28 வரை நீடிக்கப்பட்டது.
இதற்கிடையில், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு பெப்ரவரி 3 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.
பின்னர் பெப்ரவரி 2 மற்றும் 9 ஆம் திகதிகளில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து, மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த நீதிமன்றம், பெப்ரவரி 11 ஆம் திகதி நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் நிபந்தனைப் பிணை வழங்கி விடுதலை செய்திருந்தது.




