Kennedy Center-இல் இருந்து Trump பெயர் அகற்றம்; நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அதிகாலை நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர், வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற Kennedy Center கட்டிடத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை அகற்றப்பட்டது. காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் அந்த மையத்தின் பெயரை மாற்ற முடியாது என்ற நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.20 மணியளவில் பணிகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு கட்டிடத்தின் முன்பகுதியில் சாரங்கள் (scaffolding) அமைக்கப்பட்டு, பின்னர் அவை திரைகளால் மூடப்பட்டன. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் டிரம்பின் பெயரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களில் அந்த நடவடிக்கை நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் (DOJ), வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணிக்குள் டிரம்பின் பெயரை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற காலக்கெடுவை பின்பற்ற முடியாது என முன்னதாக தெரிவித்திருந்தது. இடியுடன் கூடிய மழை மற்றும் பாதுகாப்பு ஆபத்துகள் காரணமாக மேலும் 12 மணி நேர அவகாசம் கோரியிருந்தது.
எனினும், இந்த கோரிக்கை கடும் விமர்சனங்களை சந்தித்தது. டிரம்பின் பெயரை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்த ஓஹியோ மாநில ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜாய்ஸ் பீட்டி, காலக்கெடு நீட்டிப்பு கோரிக்கை “மன்னிக்க முடியாதது” என்றும், நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து பின்பற்றாத அரசாங்கத்தின் ஒரு எடுத்துக்காட்டாகும் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கடந்த டிசம்பரில், டிரம்ப் தலைமையிலான Kennedy Center நிர்வாக சபை, அந்த நிறுவனத்தின் பெயரை “The Donald J. Trump and The John F. Kennedy Memorial Center for the Performing Arts” என மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் டிரம்பின் பெயர் கட்டிடத்தில் பொருத்தப்பட்டது.
1971 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட Kennedy Center, 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப். கென்னடியின் நினைவாக உருவாக்கப்பட்டது. இந்த மையத்தின் பெயரை மாற்றுவதற்கு காங்கிரஸின் சட்டபூர்வ அனுமதி அவசியம் என கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கிடையில், டிரம்ப் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தாலும், கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றமும் அந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்த மறுத்துள்ளது.
இதன் விளைவாக, நீதிமன்ற உத்தரவின்படி Kennedy Center-இல் இருந்து டிரம்பின் பெயர் அகற்றப்பட்டுள்ளதுடன், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் இது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




