உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தில் கைதான அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே, திடீரென முன்னெடுத்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முன்னாள் பொதுஜன பெரமுன ஆதரவு தரப்பினர் முன்னெடுத்த சத்தியாகிரகத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த (08) ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் அரசியல்ரீதியாக பலனடைந்தவர்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.
இதேவேளை, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா எனப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 5 பேர் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழு ஒன்றை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நியமித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மருத்துவ பரிசோதனையை தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளுமாறும் அங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




