கல்விச் சுற்றுலா ஒன்றின்போது கிரிந்த கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவியை அலைகள் அடித்துச் சென்றதால், அவரைக் காப்பாற்ற முயன்றபோது, மொனராகல, பாதல்கும்புர, வைக்கும்புர தமிழ் மகா வித்தியாலத்தின் கணித ஆசிரியர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், பாதல்கும்புர, அலுபோத்தாவைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான கணித ஆசிரியர் என். எம். எம். நுஜும் (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த பாடசாலையின் அதிபர் மற்றும் பல ஆசிரியர்கள், கல்விச் சுற்றுலாவின்போது மாணவர்களுடன் குளிப்பதற்காக மாலை சுமார் 4.30 மணியளவில் கிரிந்த கடற்கரைக்குச் சென்றிருந்தனர். அங்கு, மாணவி ஒருவர் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அவரைக் காப்பாற்ற ஆசிரியர் சென்றபோது, இருவரும் நீரில் மூழ்கினர்.
உயிர்காப்பாளர்களும் உள்ளூர் மக்களும் இருவரையும் மீட்டு, தெபராவேவ ஆதார மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி உயிர்பிழைத்த போதும், ஆசிரியர் உயிரிழந்தார். மாணவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.




