தீயாய் பரவிய ‘அதிமுக + திமுக’ வியூக பேச்சு – என்னதான் நடக்கிறது?

Date:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது தவெக. இந்த சூழலில், அதிமுக – திமுக கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக ஆட்சியமைக்க காத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சிக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி புதன்கிழமை அன்று தவெக கூட்டணியில் இணைந்தது. காங்கிரஸின் 5 பேரை தாண்டி, பெரும்பான்மைக்கு மேலும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், தவெக தரப்பு விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருகிறது.

இந்த சூழலில் ஆட்சியமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்தார். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்காததால், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆட்சியமைப்பதற்காக விஜய்க்கு இப்போது வரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

மேலும், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து அதிமுகவில் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ‘எந்த நிலையிலும் தவெகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தடாலடியாக அறிவித்தார்.

இந்த சூழலில்தான், அதிமுக – திமுக கூட்டணி தொடர்பான பேச்சு நடந்ததாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது. அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும், திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது. பாஜகவை விலக்கிவிட்டு பாமக, விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல், தேமுதிக, அமமுக கட்சிகள் ஆட்சியில் பங்கெடுக்கும் என்றும் தகவல்கள் பறந்தன.

தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. எனினும், அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

திமுக – அதிமுக கூட்டணி எனும் திகில் கிளப்பும் செய்தி றெக்கை கட்டி பறக்கும் நிலையில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி (மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள்) இழைத்த துரோகத்தையும் மீறி, ஒரு வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படவே திமுக முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு அதிமுக தரப்பு பாஜகவை வற்புறுத்தி வருகிறது. இது மக்களின் தேர்தல் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்’ எனத் தெரிவித்து இப்போது பந்தினை அதிமுக பக்கம் தள்ளிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் திமுக – அதிமுக கூட்டணி பற்றிய தகவல்கள் தடதடக்கும் நிலையில், மறுபக்கம் திமுக இந்த செய்திகளை புறந்தள்ளியுள்ளது. ஆனாலும், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து என்னவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...

நாட்டின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, நாடு முழுவதும் சுமார்...

அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்