ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகை சூடியுள்ளார். இவரின் பின்னனி குறித்து பார்ப்போம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் ‘கொளத்தூர் தொகுதி’ ஸ்டார் தொகுதியாக பார்க்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அதாவது, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தியிருப்பது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 74,202 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஸ்டாலின். மேலும், அதிமுக வேட்பாளர் பி.சந்தன கிருஷ்ணன் 18,430 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
2011-ல் கொளத்தூர் தொகுதி உதயமானதில் இருந்து ஸ்டாலின் தான் இந்தத் தொகுதிக்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். 2011-ல் கொளத்தூரில் ஸ்டாலினும் அதிமுக தரப்பில் சைதை துரைசாமியும் மோதினார்கள்.
அடுத்த தேர்தலில் ஜே.சி.டி.பிரபாகரை வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராமை விட 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆட்சியை பிடித்து தமிழகத்தின் முதல்வரானார் ஸ்டாலின். இந்த 2026 தேர்தலில் முதல்வர் தோல்வியை தழுவியுள்ளார்.
யார் இந்த வி.எஸ் பாபு?
ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் தான் இந்த வி.எஸ்.பாபு. வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2011-ல் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு.
அந்த சமயத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார். அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவிலிருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. இந்த நிலையில், 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அதன்பிறகு அமைதிகாத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். தற்போது வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தியுள்ளார்.
முன்னொரு காலத்தில், கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் வி.எஸ் பாபு, தற்போது அவரையே வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது இயல்பான ஒன்றுதான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வி.எஸ்.பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லா புகழும் விஜய்க்கே. நான் வெற்றி பெறவில்லை, விஜய்தான் வெற்றி பெற்றுள்ளார். அவர் செல்லும் வழியில் நாங்கள் தொண்டராக செல்வோம். கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதுக்கு முதல் காரணம் விஜய்தான்” என்று கூறினார்.



