“இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக மோதலை முழுமையாக நிறுத்த ஒப்புக் கொண்டன” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள சம்மதம் அளித்துள்ளன. இரு நாடுகளும் பகுத்தறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சி: இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா இன்று வலியுறுத்தியது. முன்னதாக, “போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார்.
கூடவே, பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடனும் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய ரூபியோ, “தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில்தான், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார். இந்த நிலையில், மாலை 5.33 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிர்ந்த ட்வீட்டில், இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இந்தியா – பாக். மோதல்: நடந்தது என்ன? – கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பை இந்தியாவால் சமர்ப்பிக்க முடியவில்லை. எனினும், புதன்கிழமை நள்ளிரவில் ‘ஒபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானிற்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவில் ரஃபேல் உள்ளிட்ட நவீன விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியது.
இதற்கு பதிலடியாக இன்று “ஒபரேஷன் பன்யான் உல் மார்சூஸ்” என்ற பெயரில் பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இதில் இந்தியாவின் ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.




