தொடரூந்தை இடைநடுவே நிறுத்தி ஓட்டுநர் மாயமானதால் குறித்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடரூந்து எண் 50ன் ஓட்டுநர் திடீரென இடைநடுவே மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் காரணமாக, குறித்த தொடரூந்தில் பயணம் செய்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் (06) மதியம், குறித்த தொடரூந்து கொக்கல புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, ஓட்டுநர் திடீரென தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தலைமை ஓட்டுநர் அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தொடரூந்தை நிறுத்திவிட்டு காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர், குறித்த ஓட்டுநரை தொடர்புகொள்ள முடியாமல் போன நிலையில், சில மணி நேரம் கழித்து வந்த கொக்கல நிலைய அதிகாரி தொடருந்தில் இருந்த பயணிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்மீது ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படும் என தொடருந்து துணைப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.



