இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8ம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான குற்றச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் தொடர்புடைய ஆசிரியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரச பாடசாலையில் தரம் 8 மாணவி கடந்த ஒரு மாதமாக பாடசாலைக்கு செல்லாததையடுத்து, பாடசாலையின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பது குறித்து தாயார் ஆசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர், மாணவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், பாடசாலையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் இருவர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஒருவர் இணைந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, மாணவியால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய குறித்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். குறித்த மாணவி சிறுவர் சீர்த்திருத்த நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவியின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன