கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் வேலையில்லா பட்டதாரிகள் தங்களுடைய போராட்டங்களை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம், அதற்கு முந்தைய தினங்களில் திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டங்களில், “தங்களுக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு இன்னும் மௌனம் காப்பது ஏன்?” என்ற கேள்வியை பட்டதாரிகள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து சுமார் நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்து சுமார் இரண்டரை மாதங்கள் முடிவடைந்துள்ளன. ஆனால் வேலையில்லா பட்டதாரிகள் விடயத்தில் இதுவரை அரசினால் எந்த ஒரு சிறப்பான முன்னேற்றகரமான விடயமும் இடம்பெறவில்லை. வழமையாக அரசுகள் மேற்கொள்ளும் பரீட்சைகளுடான நியமனங்களையும், ஏற்கனவே இருந்த அரசு விட்டுச்சென்ற மிச்சங்களை பூர்த்தி செய்யும் வேலைகளுமே இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
அனுரா அரசின் அடுத்தபடி என்ன???
கிழக்கு மாகாணத்தில் கடந்த 29.01.2025ம் திகதி அன்று கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் வடக்கு, கிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளின் அடிப்படையில் 30.01.2025ம் திகதி போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போராட்டம் இன்னும் சில நாட்களுக்கு நீடித்திருப்பின் அது பாரிய அளவிலான ஒரு போராட்டமாக மாறி இருக்கும். இந்நிலையில் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. குறிப்பாக இந்தப் போராட்டத்தின் போது உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் தொடர்பான விடயம், இரண்டு குழுக்களும் தனித்தனியே பார்க்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதிகம் பேசப்பட்டது. ஆளுநரின் கையாளுகை பலித்தமையினால் அரசுக்கு வர இருந்த பாரிய நெருக்கடி இல்லாத ஆக்கப்பட்டது.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் அவர்களின் அளவு கடந்த வாக்குறுதிகள் இன்று பல வேலையில்லா பட்டதாரிகளால் கேள்விக்கு உட்படுத்தப்பட ஆரம்பித்துள்ளது. அது போல ஏனைய மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளுக்கு அவர்களிடம் இன்று பதில் இல்லாத நிலைமை.
இலங்கையில் தொடர்ச்சியாக வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை காணப்படுவதும், அவர்களின் மனதில் “அரச வேலைவாய்ப்பு ஒரே தீர்வு” என்ற எண்ணம் ஊறிப் போய் இருப்பதும் தெட்டத் தெளிவு.
அதற்கான காரணம் என்ன இதற்கு தீர்வு தான் என்ன???
உதாரணமாக ஜெர்மனி போன்ற நாடுகளில் “இரட்டை கல்வி முறை” ஊடாக கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கி அவர்களை தொழில் தேர்ச்சி உடையவர்களாக உருவாக்கும் செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இருந்த இலங்கையின் அரசுகள் இவ்வாறான மாற்றுச் சிந்தனைகளை பற்றி யோசிக்காது பல்கலைக்கழக மாணவர் உள்ளிருப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்திட்டங்களையும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படாமல் அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தியதன் விளைவு இன்றைய சிக்கல் நிலைக்கான காரணமாகும்.
முன்னைய அரசுகள் விட்ட தவறு எனினும் இன்று ஆட்சிக்கு வருவதற்காக வேலையில்லா பட்டதாரிகளின் விடயத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனுர அரசு இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் விடயத்தை எவ்வாறு கையாள போகின்றனர் என்பது கேள்வியாகவும், அதை கையாள்வதில் ஏற்படும் தோல்வி அரசுக்கான பாரிய அடியாக அமையும் என்பது நிச்சயம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.




