இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவுக்கு, சமத்துவக்கட்சி தலைவர் மு.சந்திரகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
மாவை சேனாதிராஜா 1970 களிலிருந்து தமிழரின் உரிமைக்கான அரசியற் கோஷத்தோடு பயணித்தவர். இதற்காக, ஆரம்ப காலத்தில் நீண்ட சிறைவாழ்க்கையை அனுபவித்தவர். பின்னாளில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டு, அந்த அரசியலைத் தொடர்ந்தவர். அவருடைய அரசியற் காலமானது நெருக்கடிகளும் ஏற்ற இறக்கமும்
கொண்டதாக இருந்தது. ஆயினும் அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து நின்று, தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
அவர் விரும்பிய, முன்னெடுத்த அரசியல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்த அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும்.
அந்த வகையில் மூத்த அரசியற் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு
சமத்துவக்கட்சி தனது அஞ்சலியை செலுத்தி நிற்கிறது என அஞ்சலி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.