கள்ளக்காதல் இனித்தது; பகிரங்க உறவு கசக்கிறது: மணியின் மான் குட்டிகளின் விபரீத சிந்தனை!

Date:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக சங்கு சின்னத்தில்  எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதென தமிழ் மக்கள் கூட்டணி முடிவு செய்திருந்தாலும், அந்த தரப்பிலுள்ள வி.மணிவண்ணன் அணியை சேர்ந்த சில மான் குட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கடந்த ரணில் ஆட்சியில் மதுபானச்சாலைக்கான சிபாரிசு கடிதத்தை வழங்கிய விக்னேஸ்வரனின் கட்சியில் இணைந்து, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வ.பார்த்தீபன் உள்ளிட்ட மான் குட்டிகளே இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளனர்.

அவர்கள் தமது எதிர்ப்பை வி.மணிவண்ணனுக்கு தெரிவித்துள்ளனர். எனினும், இந்த கூட்டணி அவசியமானது என வி.மணிவண்ணன் கருதுகிறார்.

யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றியிருந்த போது, ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போதும், ஈ.பி.டிபியுடன் பேச்சு நடத்தி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன்தான் ஆட்சியை தொடர்ந்தனர். அப்போது யாழ் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்த மான் குட்டிகளே தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரே காரணம்- சங்கு கூட்டணியில் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி அங்கம் வகிப்பதே.

சந்திரகுமார் முன்னர் ஈ.பி.டி.பியில் அங்கம் வகித்தவர். 10 வருடங்களின் முன்னர் அதிலிருந்து விலகி விட்டார். தற்போது தனிக்கட்சியாக செயற்பட்டு வருகிறார். அவரை ஈ.பி.டி.பியினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

அண்மைக்காலம் வரை ஈ.பி.டி.பி ஆதரவுடன் பதவி சுகத்தை அனுபவித்து வந்த மான் குட்டிகள், தற்போது திடீர் தேசியவாதிகள் வேடமணிந்து சந்திரகுமார் தரப்பை எதிர்க்கும் அரசியல் ஞானத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

இது தொடர்பில், மான் குட்டியொன்றை தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நாம் டக்ளசுடன் நேரில் பேசி மாநகரசபைக்கு ஆதரவு கேட்கவில்லை. டக்ளசின் கட்சி உறுப்பினர்களுடன்தானே பேசி ஆதரவு கேட்டோம். அப்படி சாதாரண உறுப்பினர்களுடன் பேசி ஆதரவு கேட்டதையும், சந்திரகுமார் தரப்புடன் கூட்டணி வைப்பதையும் ஒப்பிட முடியுமா?. நாம் டக்ளசிடம் பேசியிருந்தால்தானே பிழை“ என அப்பாவியாக கேட்டார்.

தமிழ் தேசியம் என்ற பெயரில் இளைய தலைமுறை எப்படி தற்குறித்தனமாக யோசிக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான்.

மான் குட்டிகள் எதிர்த்தாலும், இந்த கூட்டணியை விட்டால் அரசியலில் உயிர்வாழ வேறு வழியில்லையென்பது விக்னேஸ்வரனுக்கும், மணிவண்ணனுக்கும் புரிந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இணுவிலில் நடந்த பேச்சுவார்த்தைக்கு வி.மணிவண்ணன், பேராசிரியர் சிவநாதன் உள்ளிட்ட 3 பேர் தமிழ்மக்கள் கூட்டணி தரப்பிலிருந்து வந்திருந்தனர். அண்மைக்காலமாக மணிவண்ணனில் அதிருப்தியில் உள்ள விக்னேஸ்வரன் தற்போது கூட்டணி பேச்சுக்களுக்கு தனது தரப்பில் பேராசிரியர் சிவநாதனை அனுப்பி, அவரே இறுதி முடிவு எடுப்பவராக நியமித்துள்ளார்.

அந்த கூட்டணிக்கு சந்திரகுமாரும் வருவார் என விக்னேஸ்வரன் தரப்பினர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும். ஆனால் சந்திரகுமார் கூட்டணிக்கு வருவார் என்பதை மணிவண்ணன் முன்னரே நன்கு அறிந்திருந்தார்.

“முன்னரே குறிப்பிடதாவர்களும் கூட்டணிக்குள் வந்திருக்கிறார்கள். இதில் எமக்கு பிரச்சினை உள்ளது“ என விக்னேஸ்வரன் தரப்பினர் குறிப்பிட்டனர்.

சந்திரகுமார் தரப்பினர் கூட்டணிக்குள் வருவதில் உங்களுக்கு என்ன சிக்கல் உள்ளதென ஏனையவர்கள் கேட்க- அவர் அண்மைக்காலம் வரை ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்தார் என உப்புச்சப்பில்லாத காரணத்தை குறிப்பிட்டனர்.

அப்போது சிறிகாந்தா- “நாம் தமிழரசு கட்சியுடன் எதிர்வரும் தேர்தல்களில் கூட்டாக செயற்படுவது பற்றி பேசலாம். அவர்களும் நம்மை பேச அழைக்கிறார்கள். அவர்களும் கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குத்தானே ஆதரவளித்தார்கள்“ என்றார்.

“சரி நீங்கள் இணையாவிட்டால் பிரச்சினையில்லை. இணக்கம் தெரிவிப்பவர்கள் கூட்டணியாக செயற்படலாம். நீங்கள் முடிவெடுத்த பின் பேசலாம்“ என சுரேஸ் பிரேமச்சந்திரன் கறாராக தெரிவிக்க, விக்னேஸ்வரன் அணி பம்மியது.

இது பற்றி கட்சி தலைவர் விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடி விட்டு கூறுவதாக தெரிவித்து, கூட்ட மண்டபத்திலிருந்து வெளியே சென்றவர்கள்- விக்னேஸ்வரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தி விட்டு, மண்டபத்துக்கு திரும்பினர்.

“கூட்டணியிலுள்ள சிலர் பற்றி எமக்கு சில அதிருப்திகள் இருந்தாலும், தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கும் அபாயமுள்ள அரசியல் சூழலை புரிந்து, இந்த கூட்டணியில் இணைகிறோம்“ என தெரிவித்திருந்தனர்.

ஆனால், மணி அணியிலுள்ள சில மான் குட்டிகள் மாநகரசபை பதவிக்காக ஈ.பி.டி.பியுடன் கள்ளக்காதலில் ஈடுபடலாம், ஈ.பி.டி.பியை விட்டு விலகிய ஒரு தரப்புடன் பகிரங்க உறவு வைப்பதில்தான் தமிழ் தேசியம் தீட்டுப்பட்டு விடும் என சிந்திப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவர்களுக்கு அர்ச்சுனா அரசியல் வகுப்பெடுத்தால் புரிந்து கொள்வர்களோ, என்னவோ!

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்