ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்த நோக்கமும் புதிய அரசாங்கத்திடம் இல்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியாக தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒளிபரப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோது, அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு, சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அமைச்சரிடம் முன்வைத்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கபட்டிருந்தது.
இக் கூட்டத்தின் போது, தற்போது இயற்றப்பட்ட மற்றும் செயல்பாட்டிலுள்ள சில குறைபாடுகள் தொடர்பாக அமைச்சர் இலங்கை ஒளிபரப்பாளர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் , ஊடகங்களும் அரசாங்கமும் பரஸ்பர புரிதலுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும், ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒரு பயனற்ற மற்றும் செயலற்ற நிறுவனமாக செயற்பட்டு வந்த வெகுஜன ஊடக அமைச்சகம், அதன் சரியான இடத்தை மீட்டெடுப்பதில் தற்போதைய அரசாங்கம், முக்கிய கவனத்தை செலுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்,
ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.




