வேலணை பிரதேச மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையுடனும் 24 மணித்தியால மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்த போதும், எதிர்வரும் நாட்களில் அது தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
அண்மையில் இந்த மருத்துவமனைக்கு சென்ற மாகாண கணக்காய்வுகுழுவின் கெடுபிடிகளை தொடர்ந்து, அரச உத்தியோகத்தர்களுக்கான கடமை நேரத்தில் மாத்திரம் சிகிச்சையளிப்பதென மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
வேலணை பிரதேச மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் கடமை புரிய வேண்டும். எனினும், ஆளணித் தட்டுப்பாட்டினால் 2 மருத்துவர்கள் மாத்திரமே அங்கு கடமையில் உள்ளனர்.
4 மருத்துவர்கள் கடமையாற்றினாலே வேலணை பிரதேச மருத்துவமனையினால் 24 மணித்தியால சிகிச்சையளிக்க முடியும் என்ற போதும், அங்கு கடமையில் இருந்த 2 மருத்துவர்களும் 24 மணித்தியால சேவையாற்றி வந்துள்ளனர்.
அந்த இரண்டு மருத்துவர்களும், தமக்கிடையில் நேரத்தை பங்கிட்டு, அரச மருத்துவமனையின் சேவை தடைப்படாத விதத்தில் 24 மணித்தியால சேவையாற்றி வந்துள்ளனர்.
இதனால், அவர்கள் மாதத்தில் மேலதிக நேர கொடுப்பனவு நேரம் தவிர்ந்த சுமார் 300 மணித்தியாலங்கள் வரை சேவையாற்றி வந்துள்ளனர்.
எனினும், அண்மையில் மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் அங்கு விஜயம் மேற்கொண்டதை தொடர்ந்து, சர்ச்சை தோன்றியுள்ளது.
விதிமுறைகளிற்கு இணங்க, மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் அங்கு சென்ற போது, இரண்டு மருத்துவர்களும் அங்கு கடமையில் ஈடுபட்டிருக்க வேண்டும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் 6 மணி வரையும் கடமை நேரம்.
இந்த பணிநேர விதிமுறைக்கமைவாக கடமையாற்றினால், வேலணை பிரதேச மருத்துவமனையினால் 24 மணித்தியால சேவை வழங்க முடியாது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அல்லது மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் போன்ற பெரிய மருத்துவமனைகளில் பல மருத்துவர்கள் கடமையில் உள்ளதால், விதிமுறைகளுக்கு அமைய மருத்துவர்கள் கடமையாற்றுகிறார்கள். ஆனால், ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே கடமைபுரியும் மருத்துவமனைகளில் விதிமுறைகளுக்கு அப்பாலான சேவை புரியப்படுகிறது. விதிமுறைகளின் அடிப்படையில் கடமையாற்ற போவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டால், வேலணை பிரதேச வைத்தியசாலை போன்ற சிறிய மருத்துவமனைகளை 24 மணித்தியாலங்களும் இயக்க முடியாது.
இந்த பின்னணியில், வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தினர் சென்ற போது, மருத்துவர்களின் கடமை நேரம் தொடர்பாக ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதாகவும், இது தமது தொழில்முறை கண்ணியத்தை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதாக அந்த மருத்துவர்கள் வசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், வேலணை பிரதேச மருத்துவமனையில் 24 மணித்தியால சேவையை வழங்குவதெனில், விதிமுறைகளுக்கு அமைய கடமையாற்ற வேண்டிய- குறைந்தது 3 மருத்துவர்களையாவது நியமிக்க வேண்டுமென்றும், அவ்வாறு நியமித்தால் மாத்திரமே 24 மணித்தியால சேவையை வழங்க முடியுமென்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கடமை நேரத்தில் மாத்திரம் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தல் வேலணை பிரதேச வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 2025 ஜனவரி 1ஆம் திகதிக்குள் 3வது மருத்துவர் ஒருவர் வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்படா விட்டால், காலை 8 மணி முதல் மாலை 6 வரை மாத்திமே அங்கு மருத்துவர்கள் கடமையில் இருப்பார்கள்.