நோய்வாய்ப்பட்டுள்ள தனது பெற்றேரை கவனித்துக் கொள்வதற்காக, 2 வயதான இளம் யுவதியொருவர் பகுதி நேரமாக பேருந்து நடத்துனராக பணியாற்றுகிறார்.
இன்றைய காலத்தில் பெண்கள் பெரும்பாலான துறைகளில் பணியாற்றுகிறார்கள். ஆண்கள் மட்டுமே பணியாற்றிய பல துறைகளில் இன்று பெண்கள் வெற்றிக்கொடி கட்டி வருகிறார்கள். எனினும், இன்றும் பெண்கள் பெருமளவில் நுழையாத துறைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இலங்கையில் பெண்கள் பணியாற்றாத துறையாக- பொதுப்போக்குவரத்தை குறிப்பிடலாம்.
மிக அண்மைக்காலமாக பெண்கள், முச்சக்கர வண்டிசாரதிகளாக பணியாற்ற தொடங்கினாலும், பொதுப்போக்குவரத்து துறையில் பெண்கள் நடத்துனராக பணியாற்றுவதை காண முடிவதில்லை.
எனினும், காலி- அம்பலாங்கொட மார்க்கத்தில் தனியார் பேருந்தொன்றில் 22 வயதான இளம் யுவதியொருவர் நடத்துனராக பணியாற்றுகிறார்.
கே. அஷேகலா மதுவந்தியென்ற ரத்கம கிராமத்தை சேர்ந்த யுவதியே நடத்துனராக பணியாற்றுகிறார்.
க.பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர், தொழிற்பயிற்சி அதிகாரசபையில் ஆட்டோ மொபைல் தொழிற்பயிற்சி பெற்று வருகிறார். ஒன்றரை ஆண்டு பயிற்சிநெறியை இன்னும் 2 மாதங்களில் பூர்த்தி செய்யவுள்ளார்.
“என் பெற்றோர்கள் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. அதனால் அம்மாவையும் அப்பாவையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் வார நாட்களில் பேருந்து நடத்துனராக வேலை பார்க்க என் நண்பரின் சகோதரர் ஒருவர் என்னை இந்த வேலைக்கு அழைத்தார். இந்த வேலையைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சில ஆண்கள் அதை விசித்திரமாக பார்க்கிறார்கள்.
இப்போது ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் பெற்றுள்ளேன். அதனால் இந்த வேலைக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் நான்கு மாதங்களாக காலி- அம்பலாங்கொடையில் பேருந்து நடத்துனராகப் பணிபுரிகிறேன். மற்ற நடத்துனர் சகோதரர்கள் எனக்கு உதவுகிறார்கள். என் தாய், தந்தையை கவனித்துக் கொள்வதே எனது முதன்மையான நோக்கம். படிப்பை முடித்து தகுந்த வேலை கிடைக்கும் வரை இந்த நடத்துனர் வேலையை செய்வேன்“ என்றார்.




