ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ்ஸொன்று எதிர்திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின்பகுதி இரண்டாகப் பிரிந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா தோட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் கினிகத்ஹேனவில் இருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் தனியார் பஸ் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை பார்த்த தனியார் பஸ் சாரதி திடீரென பிரேக் போட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தனியார் பஸ் சறுக்கிச் சென்று, அதன் பின்பகுதி இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையினால் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கோரியுள்ளனர்.