இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஈரானால் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேலுக்கு உதவுமாறும், ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவதற்கு உதவுமாறும் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலின் Ben Gurion விமான நிலையம் செவ்வாய்கிழமை மாலை மூடப்பட்டது.
ஈரானிய தாக்குதலை எதிர்பார்த்து வாஷிங்டன் பிராந்தியத்தில் “அதிகரித்த படை தயார்நிலையை” கொண்டிருந்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant இடம் கூறினார்.
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பு இந்த அழைப்பு நடந்ததாகத் தெரிகிறது.
“ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக நேரடி இராணுவத் தாக்குதலைத் தொடங்கும் பட்சத்தில் ஈரானுக்கு ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்து செயலாளரும் அமைச்சரும் கலந்தாலோசித்தனர்” என்று பென்டகன் அறிக்கை கூறியது.
கடந்த வாரம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கூறியதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லா மற்றும் [IRGC கமாண்டர் அப்பாஸ்] நில்ஃபோரூஷன் ஆகியோரின் தியாகத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் இதயத்தை குறிவைத்தோம்” என்று IRGC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.