25.9 C
Jaffna
January 3, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொதுவேட்பாளர்: அடுத்த தெருக்கூத்துக்கு தயாராகும் யாழ்ப்பாண கோஸ்டி!

தமிழ் மக்களை தேசமாக திரட்டப் போகிறோம், உண்மையான தமிழனுக்கு பிறந்தால் பொதுவேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்தபடி களமிறக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர், கிட்டத்தட்ட மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இந்த உண்மையை பொதுவேட்பாளர் தரப்பினர் ஏற்கப் போவதில்லை. மக்களை திரட்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, சலுகைக்கு விலை போகாதவர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர் என உலகமகா உருட்டல்கள் உருட்டுவார்கள்.

இந்தியாவுக்கு, சர்வதேசத்துக்கு, தென்னிலங்கைக்கு செய்தி சொல்லப் போகிறோம்… அவர்களை திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறோம்… தமிழர்களை தேசமாக திரட்டப் போகிறோம் என மக்களை மயக்கும் ஏமாற்று சுலோகங்களுடன் இந்த தெருக்கூத்து ஆரம்பிக்கப்பட்ட போதே, பல அபாயங்களை சுட்டிக்காட்டியிருந்தோம்.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழர்கள் பல தசாப்தங்களாக பல வழிகளிலும் போராடியிருந்தாலும், சில விவகாரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஜனாதிபதி தேர்தல் என்றால், மக்கள் அதை ஜனாதிபதி தேர்தலாக மட்டுமே பார்ப்பார்கள். அதில் வாக்களிக்கக்கூடாது என புலிகளே சொன்னாலும், அவர்களும் சோதனைச்சாவடிகளை மூடி, துப்பாக்கிகளுடன்தான் நிற்க வேண்டும்.

இந்த தெருக்கூத்து கோஸ்டி மக்கள் தமது வழக்கத்தை மாற்ற மட்டார்கள்.

மக்கள் தமிழ் தேசிய கட்சிகளில் நம்பிக்கை இழந்து விட்டார்கள், அந்த கட்சிகளின் கையாலாகாத்தனங்களால் அதிருப்தியடைந்து விட்டனர் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

மக்கள் அதிருப்தியடைந்த கட்சிகள்- தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற மாறுவேடத்தில் வந்து பொதுவேட்பாளரை களமிறக்கினார்கள்.

பொதுவேட்பாளரை களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினருக்கு ஒரேயொரு தேவை மட்டுமே.

அந்த அணியில் இரண்டு கட்சிகளிடம் மட்டுமே நாடாளுமன்ற அங்கத்துவம் உள்ளது. அதுவும் அடுத்த தேர்தலில் எப்படியிருக்குமென சொல்ல முடியாது. ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளிடம் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் உதவும் என்ற நோக்கத்துடனேயே தமிழ் பொதுவேட்பாளர் அணிக்குள் வந்தனர். அப்போது கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில் கட்சிப் பிரமுகர்கள், இந்த அடிப்படையிலேயே வலியுறுத்தினார்கள்.

இதைதவிர, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் கதை முடியும் நிலையில் உள்ளது. அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் என்.சிறிகாந்தா போன்றவர்களுக்கு கடைசித்துரும்பாக கிடைத்ததே தமிழ் பொதுவேட்பாளர்.

இந்த கூட்டிலுள்ள பொ.ஐங்கரநேசன், மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் தரப்பு பெரிய தேர்தல்கள் எதிலும் வென்றதில்லை. தொடர்ந்து இப்படியே இருக்க முடியாது. அரசியலில் செட்டில் ஆக வேண்டுமென தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கிடைத்தது சங்கு கோஸ்டி.

அந்த கோஸ்டியில் சிவில் சமூக உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு தனிநபர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் நினைவெல்லாம் பாராளுமன்ற கதிரையே. நிலாந்தன், யதீந்திரா பேன்றவர்கள் கடந்த தேர்தலிலும் சில கட்சிகள் வழியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முனைந்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இப்படியாக அரசியலில் செட்டில் ஆக துடிக்கும் சிறிய தரப்புக்கள், தமிழ் பொதுவேட்பாளர் என மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முனைந்தார்கள்.

பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அரியநேந்திரனும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அவரும் அரசியலில் செட்டில் ஆகவில்லை.

நல்ல வாய்வித்தை காரன், எந்த பொருளையும் விற்றுவிடுவான். தமிழ் தேசியமும் அப்படித்தான். மக்களை உசார் மடையர்களாக்கி, விற்பனை செய்த தமிழ் தேசியம்தான் நல்ல சரக்கு என இவர்கள் கணக்கிட்டனர். அது நல்ல கணக்கீடுதான். ஆனால், இந்த சரக்கு சில காலமாக வீரியமிழந்து போவதை பொருட்படுத்தாமல் இம்முறையும் கையிலெடுத்து, மூக்குடைபட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் இனி புதிதாக யாரிடமும் ஆணை பெற தேவையில்லை, புதிய செய்தியெதையும் சொல்லத் தேவையில்லையென்றோம். 1976இல் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை பிரகனடத்தின் மூலம் செய்தி சொல்லியுள்ளனர். இந்த தெருக்கூத்து கோஸ்டி புதிதாக ஏதோ செய்தி சொல்லப் போவதாக குறிப்பிட்டு, இப்பொழுது என்ன செய்தி சொல்லியுள்ளனர்?

தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பொதுவேட்பாளர் 218,479 வக்குகளை பெற்றுள்ளார். ஆனால், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி, ரணில் தரப்பு இணைந்து இந்த மாவட்டங்களில் 1,278.216 வாக்குகளை பெற்றுள்ளனர். அதாவது இந்த 5 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் பொதுவேட்பாளரை விட கிட்டத்தட்ட 6 மடங்கு வாக்குகளை 3 பிரதான கட்சிகள் பெற்றுள்ளன.

இதன் செய்தி என்ன?

இதன்மூலம் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும், தென்னிலங்கைக்கும் இந்த தெருக்கூத்து கோஸ்டி சொல்லும் செய்தி என்ன?

இதற்குள். தமிழ் அப்பனுக்கு பிறந்தால் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற கேவலமான பிரச்சாரம் வேறு. அதாவது, வடக்கு கிழக்கில் தமிழ் அப்பனுக்கு பிறந்தவர்கள் 218,479 பேர் என்ற செய்தியையா சொல்லப் போகிறார்கள்?

இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையே தமிழ் பொதுவேட்பாளர் பெற்றிருக்கிறார். தனது சொந்த தொகுதியான பட்டிருப்பில் 12,356 வாக்குகளையே பெற்றிருந்தார். ஆனால் அங்கு பிரதான தென்னிலங்கை கட்சிகள் 50,000 இற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பொதுவேட்பாளர் 36,905 வாக்குகளை பெற்றார். பிரதான சிங்கள கட்சிகள் 269,074 வாக்குகளை பெற்றனர்.

தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லப் போகிறோம் என களமிறங்கிய தெருக்கூத்து கோஸ்டிக்கு, இந்த வாக்களிப்பின் மூலம் மக்கள் சொல்லும் செய்தி புரிந்திருக்குமா?

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னாயத்தமாகவே தற்போது தமிழ் பொதுவேட்பாளர் ஒத்திகை பார்க்கப்பட்டது. அவரவரின் நாடாளுமன்ற கனவை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடகத்தின் அடுத்த கட்டத்தின் திரை விரைவில் விலகவுள்ளது. புதிய ஜனாதிபதி அனுர விரைவில் பாராளுமன்றத்தை கலைக்கவுள்ளார். சங்கு சின்னத்துடனோ அல்லது வேறு சின்னத்திலோ இந்த கோஸ்டி பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் செய்தியை சொல்ல வாக்கு கோரியவர்களிடம், வழங்கப்பட்ட வாக்கின் மூலம் யாருக்கு, என்ன செய்தியை சொன்னீர்கள் என்ற கேள்வியை- சங்குக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். அந்த செய்தியின் மூலம் கிடைத்த பலன் என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். சர்வதேசம் திரும்பிப் பார்க்கும், தீர்வு கிடைக்குமென சொல்லப்பட்ட கதைகளுக்கு என்ன நடந்ததென்பதையும் கேட்க வேண்டும்.

சங்குக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் துளியும் பலனற்ற- சிலர் நாடாளுமன்றம் செல்வதற்கான சுயநல உத்திக்காக வழங்கப்பட்டது என்பதை புரிந்தீர்கள் என்றால், இனியும் ஏமாறமாட்டீர்கள்.

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5

இதையும் படியுங்கள்

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

Leave a Comment