அக்கரப்பத்தனை, ஹென்போல்ட் ஜி.எல்பிரிவில் உள்ள தோட்டத்தொழிலாளர் வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் குழந்தை பிறந்த போது கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்தார்.
கடந்த 10ஆம் திகதி, குறித்த தோட்டத்திலுள்ள வீடொன்றின் முன் நிறுத்தியிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து சாரதியின் தாயார், முச்சக்கரவண்டிக்கு பின்னால் இருந்த பொலித்தீன் பையை சோதனையிட்ட போது, துர்நாற்றம் வீசியது. பையில் இருந்த சிறு குழந்தை பிணமாக இருந்ததை பார்த்து சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டி சாரதியான 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய அயல் வீட்டு யுவதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
கடந்த 5ஆம் திகதி தான் பணிபுரிந்த மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டில் குழந்தை பிறந்ததாகவும், அந்த வீட்டில் பணிபுரியும் தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, சடலததை அக்கரப்த்தனை பகுதியில் புதைக்க, முச்சக்கர வண்டி சாரதியை அழைத்து வந்ததாகவும் சந்தேகப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், சடலத்தை காலையில் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், தனது தாய் சடலத்தை பார்த்து அயலவர்களுக்கு அறிவித்ததால் சடலத்தை அடக்கம் செய்ய முடியவில்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், சந்தேகநபரான சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குழந்தை பிரசவித்த யுவதியின் சகோதரியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.