இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் நுழைந்தாக கூறி கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 22 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்ந்து அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு கடந்த 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அயோனா விமலரத்ன, தருவைகுளத்தை மிக்கேல் ராஜா படகில் இருந்த 12 மீனவர்களுக்கும் தலா ரூ.42 லட்சம் (இலங்கை பணம் ரூ.1.5 கோடி) அபராதம் செலுத்தவும், செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மற்றொரு படகான தேன் டெனிலா என்பவர் விசைப்படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு விசாரணையின் போது, படகு உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை கூறி உள்ளது. அதற்கு இந்திய தூதரகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 10 பேர் மீதான வழக்கு செப்.10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப் படகுகளையும், 22 மீனவர்களையும், அங்குள்ள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று தருவைகுளத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேருந்து நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனால் மீனவ கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.