இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று நேற்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர்.
இரவு 9.15 மணிவரை யாழ்ப்பாணம் நகரிலுள்ள நட்சத்திர ஹொட்டலில் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்பு குறித்து கலையமுதன் தரப்பினரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, அதனை உறுதி செய்தனர். சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனு சமர்ப்பித்ததாக தெரிவித்தனர்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், அவரது மாமியாரும், முன்னாள் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சசிகலா ரவிராஜ், புதிய சுதந்திரன் பத்திரிகையை நடத்தும் மு.அகிலன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் சுதர்சன், மயூரன் மற்றும் குணாளன் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நேற்று மாலை வரை தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து துண்டுப்பிரசுரம் வழங்கும் பணியில் கலையமுதன் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.