எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்பான தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ளக குழப்பங்கள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, அந்த கட்டமைப்பிலிருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) நீக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
நேற்று (21) சுவிற்சர்லாந்துக்கான இலங்கைத் தூதர் யாழ்ப்பாணம் வந்தபோது, பொதுவேட்பாளர் குழுவினரையும் சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றிய தகவல் ரெலோ, ஜனநாயக போராளிகள் ஆகிய கட்சிகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் வி.மணிவண்ணன், மற்றும் சிவில் சமூகமென்ற பெயரில் செயற்படும் தனிநபர்கள் தரப்பிலிருந்து திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்வி நிலைய ஆசிரியர் நிலாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பிற்கான அழைப்பு ரெலோ மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டிருக்கவில்லையென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை நிலாந்தனே மேற்கொண்டிருந்தார். எனினும், அவர் அரசியல் கட்சிகளுக்கு தகவல் வழங்கவில்லை. பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் சுவிற்சர்லாந்து தூதரை தனியாக சந்திக்க அவர் திட்டமிட்டிருக்கலாமென கட்சிகள் தரப்பில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், புளொட். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளுக்கு சுவிற்சர்லாந்த தூதரகத்திலிருந்து தகவல் வழங்கப்பட்டது.
ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சிகளுக்கு யாரும் தகவல் வழங்கியிருக்கவில்லை.
இது திட்டமிட்ட – செய்தி சொல்லும்- சம்பவம் என பொதுக்கட்டமைப்பிலுள்ள ஒருவர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
அண்மையில், பொதுக்கட்டமைப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர். எனினும், கட்டமைப்பிலுள்ள கட்சிகள் அல்லாதவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதில்லையென தீர்மானித்திருந்தனர்.
ரணிலை தமிழ் கட்சிகள் சந்தித்தமைக்கு ரெலோதான் ஏற்பாடு என பொதுக்கட்டமைப்பிள்ள ஏனைய தரப்பினரிடம் அபிப்பிராயம் உள்ளது. தமது முடிவை மீறி ரணிலை சந்திக்க செல்பவர்களை, கட்டமைப்பிலிருந்து கலைத்து விடுவோம் என்றும் முன்னதாக அந்த தரப்பினர் பேசியிருந்தனர்.
இந்த பின்னணியிலேயே ரெலோவுக்கு, நேற்றைய சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.
நேற்றைய சந்திப்பு பற்றிய செய்திகள் வெளியானதும், ரெலோ தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ரெலோ தலைமை தரப்பிலிருந்து, திருநெல்வேலி ஆங்கில ஆசிரியர் நிலாந்தனுக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டு, விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க, மன்னிப்பு கோரிய நிலாந்தன், ரெலோ தலைவர் கொழும்பில் நிற்கிறார் என நினைத்து அவருக்கு தகவல் வழங்கப்படவில்லையென கூறியுள்ளார். எனினும், விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இல்லாத நிலையில், அவரது பிரதிநிதியாக மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.