பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி, அவரைக் கொலை செய்துவிட்டு, இலங்கைக்கு தப்பிச் செல்ல லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக கூறி டெல்லியை சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். பல முறை மிரட்டல் விடுத்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இத்துப்பாக்கிச்சூடு நடத்திய சாகர் மற்றும் விக்கி ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சல்மான் கானுக்கு மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் பண்ணை வீடு இருக்கிறது.
இந்த வீட்டிற்கு சல்மான் கான் அடிக்கடி தனது நண்பர்களுடன் வருவது வழக்கம். அதோடு தனது பிறந்தநாளையும் இங்குதான் கொண்டாடுவார். அதனை பயன்படுத்தி பன்வெல் வீட்டில் வைத்து சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சல்மான் கான் பண்ணை வீட்டிற்கு செல்லும் போது காரை மறித்து கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். அந்த திட்டம் வெற்றி பெறாத காரணத்தால் சல்மான் கான் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீட்டை தாக்க சதி நடப்பதாக பன்வெல் இன்ஸ்பெக்டர் நிதின் தாக்கரேயிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இத்தாக்குதலுக்கு திட்டமிட்ட அஜய் கேஸ்யப், கெளரவ் பாட்டியா, வஸ்பி கான், ஜாவேத் கான் ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து பன்வெல் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி சல்மான் கானை கொலை செய்ய 15 முதல் 20 பேர் திட்டமிட்டு இருந்தனர்.
அவர்கள் இதற்காக பாகிஸ்தானில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட அதிநவீன துப்பாக்கிகளை வாங்கவும் திட்டமிட்டு இருந்தனர். மும்பையில் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு அனைவரையும் பன்வெல் பண்ணை வீட்டை கண்காணிக்க செல்லும்படி லாரன்ஸ் பிஷ்னோய் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரியில் இருந்து 20 பேர் வரை பன்வெல் பகுதியில் தங்கி இருந்து சல்மான் கான் வீட்டை கண்காணிக்க ஆரம்பித்தனர்.
தாக்குதல் நடத்த சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டவுடன் பன்வெலில் இருந்தவர்களும் வேறு இடத்திற்கு சென்றுவிட்டனர். அவர்கள் கன்னியாகுமரியில் சந்தித்து அங்கிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
அஜய்யிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவனுடன் வீடியோ காலில் பேசி இருக்கிறான். பாகிஸ்தான் பிரஜை ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட அதிநவீன துப்பாக்கியை காட்டி இருக்கிறான். அவை வேண்டும் என்றால் 50 சதவீத பணத்தை முதலில் கொடுக்கவேண்டும் என்றும், டெலிவரி செய்தபிறகு பாக்கி பணத்தை கொடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் பிரஜை தெரிவித்துள்ளார். உடனே அஜய் பணத்தை தங்களது பாஸ் கோல்டி பிரர் கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார். இது தவிர அஜய் சிலருடன் போனில் வாட்ஸ் ஆப் மூலம் உரையாடி இருக்கிறார்” என்றார்.
பிஷ்னோய் கூட்டாளிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வருவதற்காக காத்திருந்துள்ளனர். அவர்கள் கடந்த பிப்ரவரியில் இருந்து பன்வெலில் சல்மான் கான் வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ஆனால் அஜய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பன்வெலில் தங்கி இருந்துள்ளான். இப்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.




