2013 ஓகஸ்ட் முதலாம் திகதி கம்பஹா, இரத்துபஸ்வல மற்றும் அதனை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீர் கோரி வெலிவேரிய நகரில் நடாத்திய பொதுப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ பிரிகேடியர் (மேஜர் ஜெனரலக ஓய்வுபெற்றவர்) உட்பட நால்வருக்கு எதிராக, நான்கு பேரைக் கொன்றது மற்றும் பதினைந்து பேரைக் கடுமையாகக் காயப்படுத்தியது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பை அறிவித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, நான்கு பிரதிவாதிகளை அரசுத் தரப்பு தாக்கல் செய்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தது.
பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, அருணகே சிறிசேன, ஜே.எம். திலகரட்ன மற்றும் லலித் ஆகியோர் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, சஹான் மாபா பண்டார மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
ரத்துபஸ்வல நடும்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து வெளியேறும் அசுத்தமான நீர் காரணமாக தமக்கு சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி ரத்துபஸ்வல நடும்கமுவ வெலிவேரிய மற்றும் பாலும்மஹர பிரதேச மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக டொன் அகில தினேஷ், ரம்லி சவிஷான் பெரேரா, நிலந்த புஷ்ப குமார மற்றும் டி.சமீன் சாமிகா ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் படுகாயமடைந்தனர். மெத்தமாக 45 பேர் காயமடைந்தனர்.
சட்டவிரோதமாக கூடியது, துப்பாக்கிச் சூட்டு கொலை முயற்சி மற்றும் நான்கு கொலைகள் உட்பட 75 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
வெலிவேரிய நகரில் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கம்பஹா குற்றத்தடுப்பு நிலையப் புலனாய்வுப் பிரிவினரும் அரசாங்கப் பரிசோதகர் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் நகரில் கற்கள், மணல் போத்தல்கள் போன்ற பொருட்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி, போராட்டம் நடத்தியவர்கள் தவறான வழியில் ஜனநாயக போரா்டத்தை செய்து விட்டதாகத் தெரிகிறது என தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர , இராணுவத்தின் இருநூற்று தொண்ணூறு துப்பாக்கிகளில் பதினாறு துப்பாக்கிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை, அது ஒரு குறை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் பலவந்தமாக அந்த இடத்திற்கு வந்ததாக கூறப்பட்ட போதிலும், கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அன்றைய பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர.
சேனநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உயர் இராணுவ அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு இவ்வாறு இராணுவம் அழைக்கப்பட்டதாக வழக்குத் தரப்பு சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“மேலும், இரண்டு, மூன்று மற்றும் நான்கு பிரதிவாதிகளை சுடுவதற்கு முதல் பிரதிவாதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பதை மேற்படி பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள் நிரூபிக்கின்றன. சம்பவம் நடந்த இடத்திற்கு வெளியே மேலும் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் அப்பகுதியில் பல இடங்களில் பல்வேறு இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் அதிகளவான இராணுவப் படையினர் அந்தப் பகுதிக்கு வந்திருப்பதையே இது காட்டுகிறது“ என நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இராணுவத்தை அழைக்கவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் முறைப்பாட்டின் ஆதாரத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தை வரவழைக்க வேண்டும் என மற்றுமொரு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வழக்குரைஞரின் சாட்சியங்களும் முரண்பாடுகளைக் காட்டுகின்றன.
சாட்சியங்களும் விசாரணைகளும் முறையாக நடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த பலவீனங்கள் பிரதிவாதிகளின் நன்மைக்கு வழிவகுத்தது. சட்டமா அதிபரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால் நான்கு பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என தலைமை நீதிபதி நிமல் ரணவீர தெரிவித்தார்.
இது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் நீதிபதி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, விசாரணைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.




