காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காதலனுடன் டூவீலரில் சென்றபோது காதலி தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், இருவர் மீதும் தீப்பற்றியது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காதலன் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை, டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், வயது 24. இவர், பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்தவர் சிந்துஜா, வயது 22. இவர், மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி இருவரும் டூவீலரில் ஒன்றாக பூம்புகார் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு சிரித்தபடி சேர்ந்து நின்று செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடற்கரையில் அலையை ரசித்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர், இருவரும் மயிலாடுதுறை திரும்பியுள்ளனர்.
டூவீலரில் சென்றபோது, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி பாலக்கரை அருகே சென்றதும், சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மேல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ், டூவீலரை நிறுத்திவிட்டு சிந்துஜா உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றுள்ளார். இதில் இருவர் மீதும் தீப்பற்றியுள்ளது. அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், தீயை அணைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பலத்த தீக்காயம் அடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஆகாஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை போலீஸார் சிந்துஜா மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ’ஆகாஷ், சிந்துஜா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆகாஷ் வேறு ஒரு பென்ணுடன் பேசி வந்துள்ளார். இது சிந்துஜாவுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், சம்பவத்தன்று சிறிய பாட்டிலில் பெட்ரோல் எடுத்து சென்ற சிந்துஜா, கடற்கரைக்குச் சென்றுவிட்டு வரும்போது தன் உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். இதில் இருவரும் ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டனர். காதலன் ஆகாஷை பயமுறுத்துவதற்காக செய்தாரா, அல்லது ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை ஏர்றுக்கொள்ள முடியாமல் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை. தற்போது, சிந்துஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.




