இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை
வழக்கில் சிறைவாசத்தின் பின் விடுதலையாகி, வைத்தியசாலையில் காலமான சாந்தன் எனப்படும் டி.சுரேந்திரராஜாவின் சடலம் இன்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பினால் விடுதலையாகிய பின்னர், அவர் தனது தாயாரைப் பார்க்க இலங்கை வரவிருந்தார். ஆனால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, இந்தியாவின் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.
இன்று (01) 11.35 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-122 மூலம் அவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுரேந்திரராஜாவின் உறவினர்கள் பலர் சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சடலத்தை விடுவிக்க, இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை பல அத்தியாவசிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
இன்று (01) பிற்பகல் 03.30 மணி வரை அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெறும் வரை சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.




