27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

பொலிசார் தாக்கியதாக இளைஞன் கூறுவது உண்மையா?…. பொலிசார் கூறும் புதிய தகவல்!

வட்டுக்கோட்டை பொலிசாரால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இளைஞன் ஒருவர் முறையிட்ட சம்பவம் தொடர்பில் வேறுபட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், பொலிசாருடனும் தகராறில் ஈடுபட்டதையடுத்து, பொலிஸ் நிலையம் அழைத்து சென்ற போது, அங்கிருந்து தப்பியோடி வந்து, பொலிசார் தன்னை தாக்கியதாக போலியான முறைப்பாடு செய்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பொலிசார் தன்னை கொடூரமாக தாக்கியதாக இளைஞன் முறைப்பாடளித்த போதும், அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் எதையும் காணவில்லையென தொடர்புடைய வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

யழ்ப்பாணம் பல்கலைகழக்கழ மாணவனான கருணாகரன் நிதர்ஷன் என்ற 24 வயதான இளைஞன் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பணிமனைக்கு வந்து முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார்.

பின்னர், ஊடகவியலாளர்களிடம்-

எனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ் பல்கலைக்கழககத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற பொலிசார் வழிமறித்துள்ளனர்.வழிமறித்த பொலிசார் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து பொலிசார் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன். இந்நிலையில் திடீரென அங்குவந்த சிவில் உடை தரித்த பொலிசார் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர்.இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அறை ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.

அறையினுள் பொலிசார் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள். இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர்.

இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்த செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார்.

இந்நிலையில் வீதியில் தாக்கியபோது கடையில் இருந்த இருந்த சிசிடிவி காணொளியை அழிப்பதற்காக பொலிஸார் அனைவரும் சென்றுவிட்டனர். அடிக்கு பயந்து இருந்த நான் அலெக்ஸ்க்கு நடந்த சம்பவத்தை நினைத்து பயத்தில் ஓடி வந்து விட்டேன்.

தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன்.இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிசார் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன் .எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை பொலிசாரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும்“ என்றார்.

எனினும், பொலிஸ் வட்டாரங்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இளைஞன் போலியான கதையை சோடித்து அனுதாபம் தேட முயல்கிறார் என சுட்டிக்காட்டினர்.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அண்மையாக பாதசாரி கடவையில் மாணவிகள் சென்றபோது, இளைஞன் மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் பயணித்ததாகவும், பொலிசார் மறித்த போது நிற்காமல் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இளைஞனின் நடத்தையை பாடசாலை ஆசிரியர்களும் அவதானித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிசார் மறித்த போதும் நிற்காமல் சென்ற இளைஞன், பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து பொலிசாருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து பொலிசாரே வாகனங்களை மறிக்க முடியும், சாதாரண பொலிசார் எப்படி மறிக்க முடியும் என கேட்டு, தகராறில் ஈடுபட்டுவிட்டு சென்றதாகவும், அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் தகவலின் பெயரில், சற்று தொலைவில் வைத்து இளைஞனை வழிமறித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இளைஞனிடம் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. காலாவதியான தண்டச்சீட்டு ஒன்றே இருந்துள்ளது.

இளைஞனை ஜீப்பில் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றதாகவும், பொலிஸ் நிலையத்தில் கதிரையொன்றில் இளைஞனை உட்கார வைத்ததாகவும், அழுது கொண்டிருந்து விட்டு இளைஞன் தப்பியோடி விட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இளைஞன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட சென்ற போது, பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பியோடியது பிழையான செயல், மீள சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இளைஞன் பொலிஸ் நிலையம் செல்லவில்லை.

தான் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற பதிவு செய்தார். ஆனால், அவர் 24வது விடுதியில் சிகிச்சைக்காக அனுமதியானதாக இந்த செய்தி பிரசுரமாகும் வரை தமிழ்பக்கத்தினால் உறுதி செய்ய முடியவில்லை.

பொலிசார் தன்னை தாக்கியதாக இளைஞன் குறிப்பிட… பொலிசார் அதை மறுத்து வேறு தகவல் சொல்லியுள்ளனர். இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியாகி, சட்டவைத்தியரால் பரிசோதிக்கப்பட்டாலே இது தொடர்பான தெளிவான தகவல் வெளியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment