பனை தென்னைவள சங்க முகாமையாளரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சீவல் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி வடக்கில் நடந்துள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த வேலன் பிரேமதாசா (54) என்பவரே நேற்று (4) உயிரிழந்தார்.
சீவல் தொழிலாளியான அவர், கடந்த ஜனவரி 24ஆம் திகதி நெல்லியடியில் அமைந்துள்ள பனை தென்னைவள சங்க கிளைக்கு பணம் பெற சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அங்கு பனை தென்னைவள சங்க தலைவருடன், சீவல் தொழிலாளிக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த முகாமையாளர், தலைவருடன் வாய் காட்டுகிறாயா என கேட்டு, தன்னை தூக்கி குத்தியதாக சீவல் தொழிலாளி வாக்குமூலமளித்துள்ளார்.
இதை தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சீவல் தொழிலாளி தனது வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.
உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 30ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் நெல்லியடி பொலிசார் 2ஆம் திகதி வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.
அவர் 4ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடந்த உடற்கூற்று பரிசோதனையில், கணுக்கால் எலும்பு உடைந்து ஒரே இடத்தில் தங்கியிருந்ததால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தாக்குதல் நடத்தி பனை தென்னைவள சங்க முகாமையளரான அச்சுவேலியை சேர்ந்த 26 வயதானவர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.