28 C
Jaffna
December 5, 2023
தமிழ் சங்கதி

‘இரா.சம்பந்தன் பதவிவிலக வேண்டுமென ஏன் கூறினேன்?’: தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்!

‘இரா.சம்பந்தனுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென தொலைக்காட்சியில் குறிப்பிட்டேன்’ என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (5) வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த போது, எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு விளக்கமளித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் சுமார் 15 மத்தியகுழு உறுப்பினர்களே கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த சேனாதிராசா, சுமந்திரன் விவகாரத்தை ஆரம்பித்துள்ளார்.

சுமந்திரனின் ஊடகப் பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும், அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

அந்த பேட்டியில் இரா.சம்பந்தன் பற்றிய தவறான கருத்து உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே அப்படி பேசியதாக சுமந்திரன் விளக்கமளித்தார்.

இருந்தாலும், அவரது பதில் தேவையற்றது, அதை தவிர்த்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். இதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், சுமந்திரனுக்கிடையில் சிறு விவாதம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில், கொழும்புக்கிளையை சேர்ந்த சட்டத்தரணி இரட்ணவேல் முன்னைய சந்தர்ப்பங்களில் சட்டத்தரணி கே.வி.தவராசா பலமுறை சம்பந்தன் பதவிவிலக வேண்டுமென குறிப்பிட்டதாகவும், அப்பொழுது யாரும் அது பற்றி பேசவில்லையென்றும் தெரிவித்தார். அவர் கூட்டத்தில் பலமுறை கே.வி.தவராசாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தபடியிருந்தார்.

சிறிதரன் பேசியபோது, மட்டக்களப்பில் நடந்த சம்பவமொன்றை சுட்டிக்காட்டினார். பொன்.செல்வராசாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட சுமந்திரன், “மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைமையை 32 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினரின் (சாணக்கியனின்) கைகளில் ஒப்படைத்து விட்டே அவர் காலமாகியதாக பேசினார். அது தவறான கருத்து. அப்படி செல்வராசா ஒருபோதும் சொன்னதுமில்லை. இப்படியெல்லாம் இல்லாததையெல்லாம் ஏன் பேசுகிறீர்கள். அவரது இறுதிக்கிரியையில் சுமந்திரன் இப்படி பேசினார். அந்த இறுதிக்கிரியைக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரே வரவில்லை. இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட 10 பேராவது இது பற்றி என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்“ என்றார்.

உடனே, சாணக்கியன்- அந்த பேரில் 5 பேரை எனக்கு தெரியும் என்றார்.

“நான் பட்டிருப்பு தொகுதியின் தலைமையை ஏற்க வேண்டுமென பொன்.செல்வராசா அண்ணர் விரும்பியிருந்தார்“ என சாணக்கியன் கூறினார்.

அத்துடன், கட்சியின் ஊடகச்செயலாளர் பா.அரியநேத்திரன் குறித்தும் முறைப்பாடு செய்தார். அவர் கட்சி தொடர்பாக வெளியாகும் சாதகமான, பாதகமான அனைத்து செய்திகளையும் முகநூலில் பகிர்கிறார் என்றார். அந்த முறைப்பாட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுதவிர, கட்சியின் தேசிய மாநாடு பற்றிய தீர்மானங்களும் எட்டப்பட்டது. தேசிய மாநாட்டுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ.100,000, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூ.50,000, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரூ.25,000, முன்னாள் தவிசாளர்கள் ரூ.10,000, முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ரூ.5,000 வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

2024 ஜனவரி 20ஆம் திகதி மத்திய செயற்குழு கூடி புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தை தெரிவு செய்வார்கள். அன்று நிர்வாகம் தெரிவு செய்ய முடியாமல், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 21ஆம் திகதி பொதுக்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். 28ஆம் திகதி புதிய தலைவர் உரையாற்றுவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை போட்டிக்கு 3 பேர் விண்ணப்பம்: திடீர் குழப்பத்தால் மீண்டும் கூடுகிறது மத்தியகுழு!

Pagetamil

சுமந்திரன் விவகாரத்தை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு அடக்கியே வாசிக்கும்!

Pagetamil

5ஆம் திகதி தமிழ் கட்சிகளிற்குள் ‘களேபர’ சந்திப்பு!

Pagetamil

யாழில் அருண் சித்தார்த்துக்கு போட்டியாக களமிறங்கிய 3 பேர்: தமிழ் கட்சித் தலைவர்களை அழைக்கிறார்கள்!

Pagetamil

நமக்கு வாய்த்த கட்சிகளும், தலைவர்களும்… யாழ் நகருக்கு மட்டும் கதவடைப்பா?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!